

முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட 214 நிலக்கரி சுரங்க உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நான்கு உரிமங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 93-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 218 நிலக்கரி சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டன. இவை முறைகேடாக வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பளித்தது.
இருப்பினும், இந்த உரிமங்களை ரத்து செய்வது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன் தீர்ப்பை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று வெளியிட்டது.
அதன்படி, 218 உரிமங்களில் 214 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியாருடன் கூட்டணி இன்றி, அரசே நடத்தும் ‘செயில்’ மற்றும் ‘என்டிபிசி’ நிறுவனங்களுக்குச் சொந்தமான நான்கு உரிமங்கள் தொடர்ந்து செயல்பட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நான்கு சுரங்கங்களில் இரண்டு மத்தியப் பிரதேசத்திலும், இரண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலும் உள்ளன.
6 மாதம் கெடு
தற்போது செயல்பாட்டில் உள்ள 36 நிலக்கரி சுரங்கங்கள் 6 மாதங்களுக்குள் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி இறுதி கெடுவாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இச்சுரங்கங்கள் மத்திய அரசின் கோல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
தனியார் நிலக்கரி சுரங்கங்கள் பெற்ற உரிமத்தை ரத்து செய்தால், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். எனவே, உரிமங்களை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தனியார் நிலக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது, இந்த சுரங்க உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமாக வழங்கப்பட்டவை என்று முடிவாகி விட்ட நிலையில், இத்தகைய கோரிக்கைக்கு இடமில்லை என்று நீதிபதிகள் தங்கள்தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.