

மக்களவையின் தற்போதைய எம்.பி.க்கள் 521 பேரில் 83 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள், 33 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தன்னார்வ அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014-ல் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 543 உறுப்பினர்களில் 521 பேரின் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக் கான சங்கம் (ஏடிஆர்) என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப் பதாவது: மக்களவையின் 521 எம்.பி.க்களில் 430 பேர் (83%) கோடீஸ்வரர்கள். இவர்களில் 227 பேர் பாஜக, 37 பேர் காங்கிரஸ், 29 பேர் அதிமுக, எஞ்சியவர்கள் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள்.
தற்போதைய எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14.72 கோடி ஆகும். 32 எம்.பி.க்கள் ரூ.50 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நிலையில், இருவர் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கு கீழ் சொத்து வைத்துள்ளனர்.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 521 எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 106 பேர், கொலை, கொலை முயற்சி, சமூக ஒற்றுமையை சீர்குலைத்தல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏடிஆர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.