

கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்து, மீண்டும் 2014-ம் ஆண்டு தேர்வான 153 மக்களவை எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.5.5 கோடி இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ.13.32 கோடியாக உயர்ந்துவிட்டது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை எம்.பி.க்களாக இருந்து 2014-ம் ஆண்டும் மீண்டும் தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வான 153 பேரின் சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 153 எம்.பி.க்களும் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்து விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.
1. கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.5.50 கோடியாக இருந்துள்ளது.
2. கடந்த 2014-ம் ஆண்டு இதே 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பி.க்கள் மீண்டும் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது இந்த எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.13.32 கோடியாக அதிகரித்து இருந்துள்ளது.
3. கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பிக்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.7.81 கோடி அதிகரித்துள்ளது.
4. சதவீதத்தின் அடிப்படையில்பார்த்தால், கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை இந்த 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் உயர்ந்துள்ளது.
2018 சதவீதம்
இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தின் பொன்னானி மக்களவைத் தொகுதியில் இருந்து 2009, 2014-ம் ஆண்டு தேர்வான எம்.பி. இ.டி. முகமது பஷீரின் சொத்து மதிப்பு 2,018 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 22 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தனது சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் என்று தெரிவித்திருந்த முகமது பஷீர், 2014-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தபடியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கந்தி தொகுதி எம்.பி. சிசிர் குமார் அதிகாரியின் சொத்து மதிப்பு 1700 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு 10 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.
ஏடிஆர் அமைப்பு வெளியிட்ட முதல் 10 இடங்களில் இருக்கும் எம்.பி.க்களின் சொத்துப் பட்டியல்
|
அதிமுக எம்.பி.க்கள்
அதிமுக எம்.பி. தம்பிதுரையின் சொத்து மதிப்பு 41 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து தேர்வான தம்பிதுரை தாக்கல் செய்தபோது, அவரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ரூ.13 கோடியாக அதிகரித்தது.
இதேபோல திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் சொத்து மதிப்பு 1281 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வேணுகோபாலுக்கு 20 லட்சம் ரூபாய் சொத்து இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ரூ.2 கோடியாக அதிகரித்துள்ளது.
திருச்சி தொகுதி எம்.பி. குமாரின் சொத்து மதிப்பு 247 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பி. குமார் தாக்கல் செய்த கணக்கில் தனக்கு 53 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ. ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.
ராகுல், சோனியா காந்தி
அமேதி தொகுதியில் இருந்து 2009-ம் ஆண்டு தேர்வான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 304 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் காந்தி தாக்கல் செய்த சொத்துக்கணக்கில் தனக்கு ரூ.2 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்ததால், அது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 கோடி உயர்ந்து, ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது.
ரேபரேலி தொகுதியில் இருந்து 2009-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் தேர்வான சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 573 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.ஒரு கோடியாக இருந்த சோனியாவின் சொத்து மதிப்பு கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ்
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சொத்து கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுக்குள் 139 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.7 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ.17 கோடியாக அதிகரித்துள்ளது.
பாஜக எம்.பி. வருண் காந்தியின் சொத்து மதிப்பு கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டில் 625 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.4 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.35 கோடியாக அதிகரித்தது.
சொத்துக்கள் குறைந்தது
இது தவிர சில எம்.பி.க்களின் சொத்துகளின் அளவும் குறைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கருணாகரன் சொத்து மதிப்பு 67 சதவீதமும், பாஜக எம்.பி.ஜெகதாம்பியா பால் சொத்துமதிப்பு 64 சதவீதம், பிஜு ஜனதா தளம் எம்.பி. அர்ஜுன் சரண் சேதியின் சொத்து மதிப்பு 39 சதவீதமும் குறைந்துள்ளது. மேலும், பாஜக எம்.பி. ஓம் பிரகாஷ் யாதவ் சொத்து மதிப்பு 27 சதவீதமும், காங்கிரஸ் எம்.பி. கே.வி. தாமஸ் சொத்துமதிப்பு 21 சதவீதமும் குறைந்துள்ளது.
கட்சிவாரியாக எம்.பி.க்களின் சொத்து மதிப்பு
1. இது தவிர கடந்த 2009-ம் ஆண்டு பாஜகவில் இருந்து 72 எம்.பி.க்கள் 2014-ம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துமதிப்பு கடந்த 2009-ம் ஆண்டின்போது சராசரியாக ரூ.5 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் அது ரூ.7 கோடியாக(140 சதவீதம்) அதிகரித்தது.
2. அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டில் 28 எம்.பி.க்கள், 2014-ம் ஆண்டுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். 2009ம் ஆண்டில் இந்த 28 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.5 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.12 கோடியாக(109சதவீதம்) அதிகரித்துள்ளது.
3. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 12 பேரின் சொத்து மதிப்பு கடந்த 2009-ம் ஆண்டில் சராசரியாக ரூ.93 லட்சமாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் இவர்களின் சராசரி ரூ.3 கோடியாக(221சதவீதம்) அதிகரித்தது.
4. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் 7 பேர் 2009 மற்றும் 2014-ம் ஆண்டுக்கும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 7 பேரின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.23 கோடியாக(298 சதவீதம்) அதிகரித்தது.
5. அதிமுக சார்பில் 3 எம்.பி.க்கள் 2009 மற்றும் 2014ம் ஆண்டிலும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2009ம் ஆண்டில் சராசரியாக ரூ.3 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக(78 சதவீதம்) அதிகரித்தது
6. சமாஜ்வாதிக் கட்சியின் சார்பில் 2009 மற்றும் 2014-ம் ஆண்டில் 3 எம்.பி. க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 2009-ம் ஆண்டில் இவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.3 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.15 கோடியாக (293 சதவீதம்) அதிகரித்துள்ளது.