

புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமர் மோடி என்ன மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டுத் தூங்கினாரா? என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான தீவிரப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அசாசுதீன் ஒவைசி பேசியதாவது:
''ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம் தேதி புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் கொல்லப்பட்டார்கள். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி விட்டு திரும்பியது.
இந்த விஷயத்தில் முரண்பட்ட தகவல் வெளிவருகிறது. பாலகோட் தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகிறார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாலகோட் பகுதியில் 300 செல்போன் சிக்னல்கள் கிடைத்தன. அதை தேசிய தீவிரவாத தடுப்பு அமைப்பினர் பதிவு செய்துள்ளார்கள். அவர்களைத்தான் அழித்துள்ளோம் என்று கூறுகிறார்.
நான் கேட்கிறேன், காஷ்மீருக்குள் 50 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எவ்வாறு எடுத்துச் சொல்லப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலை தடுக்கவும் முடியவில்லை.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் புல்வாமா தாக்குதலின் போது, மாட்டிறைச்சி பரியாணி சாப்பிட்டுத் தூங்கினார்களா?
நான் நடத்தும் இந்தப் போராட்டம் நாட்டில் சகோதரத்துவத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இந்தியாவில் இரு தேசியக் கட்சிகள் இருக்கிறது என்று யாராவது கூறினால், நான் இல்லை என மறுத்து, ஒரு தேசியக் கட்சிதான் இருக்கிறது என்று கூறுவேன்.
என்னைப் பொறுத்தவரை ஒன்று பாஜக, மற்றொன்று 1.5 பாஜக. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை''.
இவ்வாறு ஒவைசி பேசினார்.