Last Updated : 21 Mar, 2019 10:14 AM

 

Published : 21 Mar 2019 10:14 AM
Last Updated : 21 Mar 2019 10:14 AM

ஜம்மு காஷ்மீரில் சகவீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்று தற்கொலைக்கு முயன்ற சிஆர்பிஎப் வீரர்

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தான் தங்கி இருக்கும் முகாமில், சகவீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில், பாட்டல் பட்டாலியன் பகுதியில் 187 பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. அங்கு சிஆர்பிஎப் வீரர் அஜித் குமார் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது, அவருக்கும் சகவீரர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சகவீரர்கள் 3 பேரை திடீரென அஜித் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார் . இதில் சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் பலியானார்கள். அதன்பின் பதற்றமடைந்த அஜித் குமார் , என்ன செய்வதென்று தெரியாமல் தற்கொலைக்கு முயன்று தன்னை சுட்டுக் கொண்டார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதேத் தவிர உயிருக்கு ஆபத்தில்லை. இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த மற்ற வீரர்கள் அஜித் குமாரை மீட்டு  ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சிஆர்பிஎப் கமாண்டர் ஹரிந்தர் குமார் கூறுகையில், " சிஆர்பிஎப் வீரர் அஜித் குமார், சக வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அஜித் குமார் 3 வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு நடந்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போகர்மால், டெல்லியைச் சேர்ந்த யோகேந்திர சர்மா, ஹரியாணாவைச் சேர்ந்த உமத் சிங் ஆகியோர் என அடையாளம் தெரிந்தது " எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி பாந்த்சவுக் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் இதுபோல் வீரர் ஒருவர், சகவீரர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காசியாபாத்தில் பிஎஸ்எப் முகாமில், கான்ஸ்டபிள் ஒருவர் தனது சக வீரர்களை சுட்டுக்கொன்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x