Published : 01 Mar 2019 11:50 AM
Last Updated : 01 Mar 2019 11:50 AM

போலீஸ் பாதுகாப்புடன் ம.பி.யில் ராமர் கோயிலுக்குச் சென்ற தலித் மணமகன்

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் பாதுகாப்புடன் ராமர் கோயிலுக்கு தலித் மணமகன் ஒருவர் சென்றுள்ளார். அறிவிக்கப்படாத தடை மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராமர் கோயிலுக்குத் தாழ்த்தப்பட்டோர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ம.பி.யின் அவுரங்பூரா கிராமத்தில் உள்ள ராமர் கோயிலில் உயர் சாதியினர், தலித் பிரிவினரைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் அஜய் மால்வியா (22), தனது திருமணம் முடிந்த கையோடு போலீஸ் பாதுகாப்புடன் ராமர் கோயிலுக்குள் சென்றுள்ளார்.

இதுகுறித்து  காவல்துறை அதிகாரி ராம் குமார் ராய் கூறும்போது, ''திருமணத்துக்கும் அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்வதற்கும் அஜய் மால்வியாவுக்கு காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காவலர்களின் உதவியுடன் அஜய், நேற்று (வியாழக்கிழமை) கோயிலுக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை'' என்றார்.

இதுகுறித்துப் பேசிய அஜய் மால்வியாவின் மூத்த சகோதரர் தர்மேந்திர மால்வியா (32), ''எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் கோயிலுக்குச் சென்றதை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அதனால் இந்த முறை என் தம்பி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முன்னதாகம் 2009-ல் என்னுடைய திருமணம் நடைபெற்றபோது உயர் சாதியினரைப் போல குதிரையில் ஊர்வலம் சென்றேன். அப்போது எங்கள் மீது கற்கள் வீசப்பட்டன'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x