மரக்கிளையில் புதிராகச் செத்துக்கிடந்த 4 வயது சிறுத்தை

மரக்கிளையில் புதிராகச் செத்துக்கிடந்த 4 வயது சிறுத்தை
Updated on
1 min read

மைசூர் அருகே, ஜெயபுரா ஹூப்லியில் காலஹல்லி கிராமத்தில் மரக்கிளையில் இரு கால்களும் பின்னப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது பெரும் புதிராக அமைந்துள்ளது.

இந்த 4 வயது சிறுத்தை எங்கு செல்கிறது என்பதை அறிய அதன் கழுத்தில் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மார்ச் 21ஆம் தேதி இந்தச் சிறுத்தையை எச்.டி. கோட்டியில் பிடித்த வனத்துறை அதிகாரிகள் அதனை நாகரஹோலி தேசியப் பூங்காவில் விட்டுள்ளனர்.

மைசூர், வனத்துறை உயரதிகாரி வி.கரிகாலன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இது பற்றி கூறும்போது, நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சிறுத்தை மரத்தில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வந்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.

சிறுத்தையின் உடல் 30 அடி உயரத்தில் இருந்த்து. பரிசோதனைக்காக அதன் உடலை கீழிறக்கினோம். சிறுத்தையின் புதிர் சாவுக்குக் காரணம் என்னவென்பது உடனடியாகத் தெரியவில்லை என்றார்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் இருதயம், லிவர் மற்றும் மண்ணீரலில் கடுமையான பாக்டீரியா கிருமித் தொற்றின் பாதிப்பினல் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் தகவல் 2 நாட்களாக சிறுத்தை ஒன்று மரத்தில் இறந்து தொங்கிக் கிடந்தது என்ற தகவல்தான் கிடைத்துள்ளது. ஆனால் பிரேதப் பரிசோதனை செய்த விலங்கு மருத்துவ நிபுணர் டாக்டர் நாகராஜ், உள்ளூர்வாசிகள் சிறுத்தை இறந்து கிடந்ததைப் பார்த்ததாகக் கூறுவதற்கு 8 மணி நேரம் முன்னதாக சிறுத்தை இறந்திருக்கலாம் என்றார்.

அதன் உடலில் புறக்காயங்கள் எதுவும் இல்லை. மரத்தில் ஏறிய பிறகு மரணம் ஏற்பட்டிருக்கலாம் மரணத் தருணத்தில் அதன் கால்கள் கிளையில் பின்னிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்ட இந்தச் சிறுத்தை சென்ற தடம் காண முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in