Last Updated : 07 Mar, 2019 11:26 AM

 

Published : 07 Mar 2019 11:26 AM
Last Updated : 07 Mar 2019 11:26 AM

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்துங்கள்: ராகுல் காந்தி கடுமை

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி உட்பட எல்லோரிடமும் விசாரணை நடத்துமாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசியதாவது:

 

''பிரதமர் குற்றமற்றவர் என்றால் ஏன் ரஃபேல் விவகாரத்தில் தன்னிடம் விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்று கூற மறுக்கிறார்?

 

ரஃபேல் ஒப்பந்தத்தில் விசாரணை வேண்டும் என்று பலமுறை கூறியும் எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. பிரதமர் மோடியைக் காப்பதற்காக மத்திய அரசு, நிறுவனங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

 

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை தி இந்து (ஆங்கில நாளிதழ்) தெளிவாகக் காண்பித்துள்ளது. ஆனால் அலுவலக ரகசியங்கள் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தைரியமாக ஆவணங்களை வெளியிட்டதற்காக நீங்கள் (தி இந்து) தண்டிக்கப்படுகறீர்கள்.

 

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் குறுக்கீடு இருந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில் பிரதமரை ஏன் விசாரணை செய்யக் கூடாது?

 

இதில் தொடர்புடைய அனைவரையும் விசாரியுங்கள்; பிரதமர் உட்பட.

 

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாம். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலை, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகள் காணாமல் போனதுபோல, ஆவணங்களும் மறைந்துவிட்டன.

 

ஆவணங்களை அழிக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது'' என்றார் ராகுல் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x