Published : 23 Mar 2019 04:54 PM
Last Updated : 23 Mar 2019 04:54 PM

30 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றிபெறாத போபாலில் திக் விஜய் சிங் போட்டி: அரசியல் எதிரியை பழிவாங்கிய கமல்நாத்

காங்கிரஸ் 30 ஆண்டுகளாக வெற்றி பெறாத போபால் தொகுதியில் அரசியல் எதிரியான மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை களமிறக்கியுள்ளார் அம்மாநில முதல்வர் கமல்நாத்.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும், முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கும் காங்கிரஸின் மிக மூத்த தலைவர்கள். அம்மாநிலத்தில் இருவரும் எதிரெதிர் கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, இருவருமே முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர். எனினும் கடைசியில் ராகுல் காந்தி தலையிட்டு கமல்நாத்தை முதல்வராக்கினார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய திக் விஜய் சிங் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வலிமையாக உள்ள தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விரும்பினார். குவாலியர், குணா உள்ளிட்ட ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால் அவரை கடும் சோதனைக்கு ஆளாக்கும் வகையில் போபால் தொகுதியில் போட்டியிட செய்ய வேண்டும் என கமல்நாத் கட்சி தலைமையை வலியுறுத்தினார். மத்திய பிரதேசத்தில் இந்தூர், போபால், விதிஷா ஆகிய 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் 30 ஆண்டுகளாகவே வெற்றி பெற்றதில்லை.

போபாலில் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சங்கர் தயாள் சர்மா போட்டியிட்டு வென்றார். போபாலில் திக் விஜய் சிங் போட்டியிடுவதை முதல்வர் கமல்நாத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங், ‘‘நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். சவாலை ஏற்று நான் போபாலில் போட்டியிட முடிவு செய்து விட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x