Last Updated : 28 Mar, 2019 01:25 PM

 

Published : 28 Mar 2019 01:25 PM
Last Updated : 28 Mar 2019 01:25 PM

"நாட்டில் மோடி அலை ஏதும் இல்லை, தேர்தல் நேரத்தில் மிஷன் சக்தியை வெளியிடவேண்டிய அவசியம் என்ன ": ஒவைசி காட்டம்

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போல் நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. தேர்தல் நேரத்தில் மிஷன் சக்தி போன்ற திட்டங்கள் குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று பிரதமர் மோடியை காட்டமாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பியுமான அசாசுதீன் ஒவைசி காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான அசாசுதீன் ஒவைசி ஹைதராபத் தொகுதியில் 3 முறை எம்.பியாக இருந்து வருகிறார். 4-வது முறையாகவும் இதே தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வருகின்ற மக்களவைத் தேர்தல் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. 543 தொகுதியில் ஒவ்வொரு இடத்துக்கும் நடக்கும் போட்டி.

 கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்ததுபோல், இந்த தேர்தலில் மோடி அலை ஏதும் வீசவில்லை. மாநிலங்களில் இருந்து  வரும் தலைவர்கள் ராகுல் காந்தியை காட்டிலும், நரேந்திர மோடியைக் காட்டிலும், ஒவைசியைக் காட்டிலும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் மத்தியில் ஆட்சியை  முடிவு செய்வார்கள்.

பாஜக தன்னுடைய தோல்விகளை மறைக்க முடியாமல் விரக்தியில் இருக்கிறது, தோல்விகளை மறைக்க போராடுகிறது. ஆனால், இந்த முறை மக்கள் போலி வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.

துல்லியத் தாக்குதல் நடத்தினார்கள், பாலகோட்டில் தாக்குதல் நடத்தினார்கள்,இப்போது செயற்கைக்கோள் தடுப்பு ஏவுகணை சோதனை நடத்தி இருக்கிறார்கள். தேர்தல் குறித்த திட்டம் நாளுக்கு நாள் மாறுகிறது. இவை அனைத்தும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக பாஜக செய்யும் யுத்தி.

கடந்த 5ஆண்டுகளாக இந்த முக்கிய சோதனையை ஏன் செய்யாமல் இருந்தீர்கள். தேர்தல் நேரம் வரை ஏன் காத்திருக்கிறீர்கள், இதுதான் மோடிக்கு சரியான நேரமா, தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன் இந்த அறிவிப்பை ஏன் வெளியிட வேண்டும்.

வேலையின்மை, பணவீக்கம், பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே மிஷன் சக்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தலில் பாஜக தோல்வி தவிர்க்க முடியாதது. நாளுக்கு நாள் தேர்தல் கணிப்புகள் மாறிக்கொண்டு வருகின்றன.

வரும் மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு மிகப்பெரிதாக இருக்கும். 543 தொகுதிகளில் 100 தொகுதிகளில் மட்டுமே பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக போட்டியிடுகின்றன. மற்ற 320 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மாநில கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கப்போகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை பிராந்தியக் கட்சிகள்தான் நிர்ணயிக்கும்.

130 தொகுதிகளைக் கொண்ட 5 தென் மாநிலங்களில் பாஜகவால் எந்தவிதமான பெரிய வெற்றிகளையும் பெற முடியாது. கர்நாடகாவில் மட்டுமே சில இடங்களைப் பெற முடியும். இந்த முறை செகந்திராபாத்தில் நிச்சயம் பாஜக தோல்வி அடையும்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக பொதுத்தேர்தலில் வென்றபோது, 280 இடங்களில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. இந்த ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் துணையுடன் ஆண்டால் போதும் என்று பாஜக நம்புகிறது.

நான் மோடிக்கு எதிராகப் பேசினால், பெரும்பான்மை மக்களுக்கு எதிராகப் பேசுவது அல்ல. பெரும்பான்மை மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும், ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெறாது, அவ்வாறு இருந்தால், இந்திய அரசமைப்புக்கு இடமிருக்காது. நான் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமானவன் அல்ல. ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரானவன். தொடர்ந்து அவர்களை எதிர்ப்பேன்.

இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x