பாஜக புதிய வியூகம்: மிசோரம் ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா; திருவனந்தபுரத்தில் போட்டி?

பாஜக புதிய வியூகம்: மிசோரம் ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா; திருவனந்தபுரத்தில் போட்டி?
Updated on
1 min read

மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக களமிறங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் என இருதுரு அரசியல் ஆதிக்கம் மிகுந்த கேரளாவில் சமீபகாலமாக பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழவ சமூக அமைப்பின் அரசியல் கட்சியான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்து 15 சதவீத்துக்கும் கூடுதலான வாக்குகளை பாஜக பெற்றது.

சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாஜக தனது ஆதரவு தளத்தை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற தீவிர முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு தொகுதி இது என்பதால் இங்கு போட்டியிட பாஜக முன்னணி தலைவர்களிடையே போட்டி நிலவி வருகிறது. பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, முன்னாள் தலைவர் முரளிதரன், மூத்த தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர்  தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் களக்கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் முரளிதரன் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரது தோல்விக்கு கோஷ்டிபூசலும் காரணம் என கூறப்பட்டது. திருவனந்தபுரம் தொகுதியில், ஸ்ரீதரன் பிள்ளை, முரளிதரன், கிருஷ்ணதாஸ் என பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து கோஷ்டிபூசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பாஜக முன்னாள் தலைவரும், மிசோரம் ஆளுநருமான கும்மணம் ராஜசேகரனை திருவனந்தபுரம் தொகுதியில் களம் காண வைக்க பாஜக தலைமை திட்டமிட்டது. கும்மணம் ராஜசேகரனுக்கு ஆர்எஸ்எஸூம் ஆதரவு தெரிவித்தது.

இந்தநிலையில் கும்மணம் ராஜசேகரன் இன்று ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். சுமார் 10 மாதங்கள் நீடித்த நிலையில், இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினார். அவரது ராஜினாமா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

மிசோரம் மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்கும் வரை, அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு, மிசோரம் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநில பாஜக முன்னாள் தலைவரான கும்மணம் ராஜசேகரன், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் திவாகரன் களமிறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி சசி தரூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in