மும்பை தாக்குதல்போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை

மும்பை தாக்குதல்போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை
Updated on
1 min read

மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கடற்படை தளபதி லம்பா கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதைத் தொடர்ந்து இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. எதிர்தாக்குதல் நடத்தியபோது இந்திய விமானப்படை விமான அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் சிக்கிக்கொண்டார். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அவர் இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் இந்திய பகுதிக்குள் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் நுழைந்து பெரும் தாக்குதல் நடத்தியதை போலவே மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா கூறியுள்ளார்.  

இந்தோ - பசிபிக் பிராந்தியக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உலகின் பல நாடுகளும் தொடர்ந்து தீவிரவாத பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத தாக்குதலை முடிவுக் கொண்டு வர அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

சமீபத்தில் மிக மோசமான தாக்குதலை காஷ்மீரில் நாங்கள் சந்தித்தோம். இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு வரும் தீவிரவாதிகளின் முயற்சி இது. ஆனால் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது. 

பாகிஸ்தான் ஆதரவு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் பல்வேறு வழிகள் வழியாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கடல் வழியாக தாக்குதல் நடத்த பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in