Published : 22 Mar 2019 09:02 PM
Last Updated : 22 Mar 2019 09:02 PM

ராஜ்நாத் சிங், அத்வானி, கட்கரிக்கு ரூ.1800 கோடி அளித்ததாகப் புகார்: எடியூரப்பா  ‘டைரி நகல்கள்’ உண்மையானதாகத் தெரியவில்லை -வருமான வரித்துறை

கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஏறக்குறைய ரூ.1,800 கோடியை ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி உள்ளிட்ட பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக எடியூரப்பாவின் டைரி நகல்கள் உண்மையானதாகத் தெரியவில்லை ஆகவே அசல் டைரிப் பக்கங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கர்நாடக மாநில வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

 

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது புதிதாக அமைக்கப்பட்ட, லோக்பால் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

'தி கேரவன்' பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஏறக்குறைய ரூ.1,800 கோடியை ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி உள்ளிட்ட பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. மேலும், எடியூரப்பா கைப்பட எழுதியதாக  சில கடிதங்களையும் தி கேரவன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

 

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி  விசாரணை நடத்த வேண்டும் என்று கூற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவோ   “நான் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ரூ.1800 கோடி கொடுத்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு மிகவும் மோசமானது, தவறான நோக்கத்துடன் கூறப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஏற்கனவே வருமானவரித்துறை விசாரணை நடத்தி, அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்துள்ளது, இது ஏற்கனவே முடிக்கப்பட்ட விவகாரம்.

 

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில், மனவிரக்தியில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறுகிறது. வருமானவரித் துறை நான் கைப்பட எழுதிய கடிதங்கள், காகிதங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அனைத்தும் போலியானவை என்று கூறிவிட்டன. திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார்கள்” என்று மறுத்தார்.

 

இந்நிலையில் பணம் கைமாறியதாகப் பதிவு செய்யப்பட்ட எடியூரப்பாவின் டைரியின் உதிர்ந்த தாள்கள் என்று காட்டப்படுபவையின் உண்மைத் தன்மை குறித்து வருமானவரித்துறை சந்தேகம் எழுப்பி ஒரிஜினல் டைரியை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “சர்ச்சைக்குரிய இந்த விஷயங்கள் பதிவாகியுள்ள பக்கங்களுக்கு ஆதார மதிப்பு வேண்டுமெனில் அசலான டைரி பக்கங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

 

இந்தச் சர்ச்சைக்குரிய பதிவுகளின் அசல் வடிவங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அதனைப் பெற வருமான வரித்துறை போராடி வருகிறது. ஆனால் அசல் பக்கங்கள் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. அப்படியிருந்தால் அது எங்கு உள்ளது என்பதும் தெரியவில்லை.  ஆனால் இப்போது கையில் கிடைத்துள்ள காகிதங்கள் சரியாக இல்லை அதன் உண்மைத்தன்மை மீது சந்தேகமாக உள்ளது. இதனை அளித்தவர் மீது வரி ஏய்ப்புக்காக ரெய்டு நடத்தப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.

 

டிகே.சிவகுமார் என்பவரின் சொத்துக்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்திய போது  அவருக்கு எதிராக பல ஆவணங்கள் சிக்கியது. இந்த ரெய்டின் போதுதான் எடியூரப்பாவின் டைரி கிடைத்தது, அதில் சில பெயர்கள் அதற்கு நேராக தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரிஜினல்கள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்த டைரி எடியூரப்பாவினுடையது என்று டிகே சிவகுமார் தெரிவித்தார். அதில் எடியூரப்பா எம்.எல்.ஏ.க்கள் உட்பட சிலருக்கு கொடுத்த தொகை விவரங்கள் இருந்தன.

 

இதனையடுத்து வருமான வரித்துறை எடியூரப்பாவை விசாரித்த போது,  ‘எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. இந்த பக்கங்களில் உள்ள எழுத்துக்கள் என்னுடையது அல்ல” என்று தன் கையெழுத்தை மறுத்தார். மேலும் அந்த காகிதங்களில் உள்ள உள்ளடக்கம் போலியானவை இட்டுக்கட்டப்பட்டவை என்றும் அவர் மறுத்திருந்தார்.  மேலும் எடியூரப்பா தன் கையெழுத்தின் மாதிரிகளையும் அளித்தார்.

 

இந்நிலையில் ஒரிஜினல்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினால்தான் தெரியவரும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x