

'மிஷன் சக்தி' திட்டம் வெற்றியடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஏதுமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று இரவு விளக்கம் அளித்துள்ளது.
விண்வெளியில் இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணையை கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை வெற்றிகரமாக சோதித்தது. 3 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த பயனில்லாத செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தாக்கி அழித்தது.
இதற்கு 'மிஷன் சக்தி' திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமானதையடுத்து, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஏறக்குறைய 15 நிமிடங்கள் நாட்டு மக்களிடம் 'மிஷன் திட்டம்' குறித்தும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை குறித்தும் மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் பிரதமர் மோடி அரசு ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களிடம் பேசியது. தேர்தல் நடத்தை விதமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைக்களுக்கு எதிரானது. அதை விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம், பிரமதர் மோடியின் பேச்சை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களும் இல்லை. எந்தக் கட்சிக்காகவும், யாருக்காகவும் அவர் வாக்குக் கேட்கவில்லை. இஸ்ரோ குறித்தும், 'மிஷன் சக்தி' திட்டம் குறித்து மட்டுமே அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அரசு ஊடகங்களை எந்தவிதத்திலும் அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகள் குழு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் ஒரு நகலும் சீதாராம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''பிரதமர் மோடியின் 'மிஷன் சக்தி' திட்டம் குறித்த பேச்சை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையில், பிரதமரின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதமுறைகளையும் மீறவில்லை. அரசின் ஊடகங்களை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையத்தின் மூத்த அதிகாரிகளை அழைத்துப் பேசினோம். அவர்கள் அளித்த தகவலில், தனியார் ஏஜென்சி அளித்த வீடியோவின் அடிப்படையில்தான் பிரதமர் மோடியின் பேச்சை ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துள்ளனர். தூர்தர்ஷனிடம் இருந்து ஆடியோ எடுத்து தாங்கள் பயன்படுத்தியதாக அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் பேச்சை பிரத்யேகமாக ஒலிபரப்பாமல், செய்தியாகவே ஒலிபரப்பினோம் என்று அகில இந்தியா வானொலி நிலையம் தெரிவித்துள்ளது. தூர்தர்ஷன் மட்டுமல்லாமல், 60-க்கும் மேற்பட்ட சேனல்கள் பிரதமர் மோடியின் பேச்சை ஒளிபரப்பினார்கள் என்று தூர்தர்ஷன் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் மோடியின் பேச்சில் அரசின் சாதனைகள் குறித்தோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தனிமனிதர் குறித்தோ எந்தவிதமான குறிப்பும் இடபெறவில்லை. 'மிஷன் சக்தி' திட்டம் குறித்தும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு மட்டுமே தெரிவித்துள்ளார். ஆதலால், இதில் தேர்தல் விதிமுறை மீறல் ஏதும் இல்லை ''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமானது, நாளேடுகள் உள்ளிட்ட மற்ற ஊடகங்களில் அரசின் செலவில் விளம்பரம் செய்வது, அரசு ஊடகங்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவது, அரசியல் செய்திகளையும், அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்களையும் ஆளும் அரசு வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.