Published : 13 Mar 2019 01:24 PM
Last Updated : 13 Mar 2019 01:24 PM

வாக்களிக்க மக்களை ஊக்குவிப்போம்: ராகுல், மம்தா, ஸ்டாலினுக்கு பிரதமர் வேண்டுகோள்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பல்துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் நடந்த பல்வேறு மாநில சட்டப்பேரவை வாக்குப்பதிவு நாளன்று பிரதமர் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த முறை, வரவிருக்கும் 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

2019 மக்களவை தேர்தலில் வாக்காளார்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்துள்ள அரசியல் பிரபலங்களில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் சில செய்தி நாளேடுகளுக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு மிகவும் பெரியது. மக்களின் மனங்களிலும் ஊடகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர்கள் சிலருக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரியுள்ளார்.

இவர்கள் தவிர பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய் குமார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் ஆகியோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களது படைப்புத்திறனை பயன்படுத்தி வாக்காளர்களை ஊக்குவிக்கக் கோரியுள்ளார். நடிகைகள் தீபிகா படுகோன், ஆலியா பட், ஆகியோருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் இந்தப் பணியில் இணையக் கோரியுள்ளார். களத்தில் சதமடித்து ரசிகர்களைக் கவர்வதுபோல் 130 கோடி மக்களையும் ஈர்த்து வாக்குப்பதிவிலும் புதிய சாதனை படைக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வீரர்கள் அனில்கும்ப்ளே, விவிஎஸ் லக்‌ஷ்மண், வீரேந்திர சேவாக் ஆகியோரையும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., பிரம்மகுமாரிகள் இயக்கங்களுக்கு அழைப்பு..

தனிநபர்கள் தவிர ஆர்.எஸ்.எஸ். இயக்கம், தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ்., பிரம்மகுமாரிகள் போன்ற அமைப்புகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத், பபிதா போகத், ரிது போகத், வினேஷ் போகத் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். தொழிலதிபர்கள் ரத்தன் டாட்டா, ஆனந்த் மஹிந்திரா ஆகியோரையும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடங்கி, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் வரை பிரதமர் விடுத்திருக்கும் இந்த அழைப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x