Published : 29 Mar 2019 06:03 AM
Last Updated : 29 Mar 2019 06:03 AM

மிஷன் சக்தி: என்ன? ஏன்? எதற்கு?

கைபேசியில்லாமல் நம்மில் எத்தனை பேர் ஒரு நாளை ஓட்டமுடியும்? நம் அன்றாடங்களான கைபேசி, தொலைக்காட்சி, இணையத் தொடர்பு ஆகியவை இடைவிடாமல் இயங்க நமது செயற்கைக்கோள்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும். இவை மட்டுமல்ல. ஏடிஏம் மையங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, வானிலை மையங்கள் தடையில்லாமல் இயங்க செயற்கைக்கோள்கள் இமைப்பொழுதும் சோராமல் இயங்க வேண்டும்.

தேச பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் தொடர்புகளுக்கும், ஏவுகணை செயல்பாடுகளுக்கும் செயற்கைக்கோள்கள் எவ்வளவு முக்கியம் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக, செயற்கைக்கோள்கள் செயலிழந்தால் தேசம் ஸ்தம்பிக்கும்.

பாதுகாப்பு முக்கியம்

ஒரு நாட்டை தாக்க வேண்டுமெனில், அந்நாட்டின் ராணுவ நிலைகளையோ, முக்கிய கட்டிடங்களையோ தாக்காமல் அந்நாட்டின் செயற்கைக்கோள்களை தாக்கினால் என்ன? பலத்த சேதம் உத்தரவாதம். தவிர கண்களும் காதுகளும் (செயற்கைக்கோள் படங்கள், தகவல்கள்) பாதிக்கப்பட்டதால் அந்நாட்டின் ராணுவம் பதிலடி கொடுக்கவும் முடியாது.

நாட்டின் எல்லைகள் பலத்தபாதுகாப்புடன் காவல் செய்யப்படுகின்றன. நாடாளுமன்றம், விமான நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த  வளாகங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களை எப்படி பாதுகாப்பது?

முப்படைகள் போதுமா?

ஒரு நாட்டின் நிலம், கடல், வானம் இவற்றைப் பாதுகாக்க முப்படைகள் உண்டு. இந்த 3 இயங்கு தளங்களைத் தாண்டி 4-வது தளமாக விண்வெளியும், 5-வது தளமாக இணையவெளியும் தலையெடுத்துள்ளன. இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ள சைபர் பாதுகாப்புக் குழுக்கள் முப்படைகளிலும் காவல் துறையிலும் உள்ளன. விண்வெளி தாக்குதல்களை தொடுக்கவும் தடுக்கவும் பல நாடுகளில் தீவிர ஆராய்ச்சிகளும் சோதனைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

விண்வெளி பாதுகாப்புப் பிரிவுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமானப் படைகளிலோ, முப்படைகளிலோ ஓர் உட்பிரிவாக இயங்கி வருகின்றன. சீனா, 2016-ல்தனியாக விண்வெளிப் படை அமைத்தது. அமெரிக்காவும் 2020-ல் தனி விண்வெளிப் படைஅமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ‘ஒருங்கிணைந்த விண்வெளிப் பிரிவு’ என்ற முப்படைகளும் விண்வெளித் துறையும் இணைந்த அமைப்பு, ராணுவ மற்றும் பொது பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் சார்ந்த தளவாடங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

செயற்கைக்கோள்களை அழிக்கும் நுட்பங்கள் பல உண்டு. தரையில் இருந்து லேசர் கதிர்களை செலுத்தி அழிக்கலாம், தொலைதூர உந்துவிசை (Ballistic) ஏவுகணைகளை செலுத்தி அழிக்கலாம். இந்த ஏவுகணைகளை தரையில் இருந்தோ, போர் விமானத்தில் இருந்தோ, கப்பலில் இருந்தோ ஏவலாம். இந்த ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை மோதியோ  (Kinetic Kill) வெடி பொருளை வெடிக்க வைத்தோ அழிக்க முடியும்.

செயற்கைக்கோள்களைப் போல ஆயதத்தையும் விண்வெளிக்கு செலுத்தி நீள்வட்டப் பாதையில் பயணிக்க வைத்துதாக்க வேண்டிய செயற்கைக்கோளுக்கு அருகில் சென்றதும் வெடிக்கச் செய்யலாம். ஒருராணுவ நிலையத்தை விண்வெளியில் சுற்றுப்பாதையில் வலம் வரச்செய்து, தேவைப்படும் போதுஆயுதங்கள் அல்லது லேசர் கதிர்களைக் கொண்டு விண்வெளி இலக்குகளை தாக்கலாம். ஜாமர்(Jammer) மூலம் செயற்கைக்கோள்களின் தொலைதொடர்புகளை முடக்கும் நுட்பங்களும் உண்டு.

மிஷன் சக்தி

செயற்கைக்கோள்களை தாக்கும் தொழில்நுட்பம் வைத்துள்ள நாட்டின் செயற்கைக்கோள்களை, பதிலடிக்கு பயந்து பிற நாடுகள் தாக்காது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தமது செயற்கைக்கோள் எதிர் ஆயுதங்களை வெற்றிகரமாக சோதித்துள்ளன.

இந்தப் பின்புலத்தில் தான் இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ முக்கியத்துவம் பெருகிறது. எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய ‘உந்துஏவுகணைப் பாதுகாப்பு’ (BallisticMissile Defense) அமைப்பை கொண்டது இந்தியா. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட 5 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எதிரிகளின் ஏவுகணைகளை வழியிலேயே அழிக்கும் நுட்பம் (Interceptor) குறிப்பிடத்தக்கது. இந்தியா கைவரப் பெற்றிருக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் நீட்சியே ‘மிஷன் சக்தி’. எதிரி ஏவுகணைகளை வானில் சந்தித்துஅழிப்பதைப் போல, விண்வெளிக்கு சென்று செயற்கைக்கோள்களை தொட முயற்சித்தால் என்ன?

சிக்கலான சவால்கள்

எதிரி ஏவுகணைகளை அழிப்பதைப் போல சுலபமானதல்ல செயற்கைக்கோள் தாக்குதல். முதல் சவால் உயரம். பயணிகள் விமானம் தரையிலிருந்து ஏறக்

குறைய 10 கிமீ உயரத்தில் பறக்கும். போர் விமானங்கள் ஏறக்குறைய 15 கிமீ உயரத்தில் பறக்கும். ஆனால் செயற்கைக்கோள்கள் வளிமண்டல எதிர்விசையை தவிர்க்க, 300 கிலோ மீட்டருக்கும் மேலுள்ள உயரங்களில் சுற்றிவரும். பூமியிலிருந்து 2,000 கிமீ உயரம் வரை ‘தாழ்வு வட்டப்பாதை’ என்று குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவது சவால் வேகம். மூன்றாவது சவால் நேரம். அதிவிரைவில் பயணிக்கும் இலக்கை தாக்க கிடைக்கும் நேரம் மிகக்குறைவு. மிகக்குறுகிய நேரத்தில் உந்து கருவிகள் இயங்கி ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்த வேண்டும். கணினியும் மென்பொருளும் விரையும் இலக்கின் இடத்தை உடனுக்குடன் கணக்கிட்டு ஏவுகணையை கட்டுப்படுத்த வேண்டும்.

நான்காவது சவால் அளவு.செயற்கைகோள்கள் ஏவுகணைகளை விட அளவில் சிறிதாக இருக்கும். சிறிய பொருளை தூரத்திலிருந்து துரத்தி தாக்குவது கடினம்தானே.

வெடிபொருளை வெடித்து செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை, செயற்கைக்கோளுக்கு அருகில் சென்றாலே போதும், ஆனால் மோதி அழிக்கும் ஏவுகணைகள் துல்லியமாக இலக்கை தாக்க வேண்டும். ‘மிஷன் சக்தி’ இரண்டாம் வகை ஏவுகணை. எனவே கூடுதல் சவால்.

இமாலய சாதனை

எல்லா சவால்களையும் மேற்கொண்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 18 டன் எடையுள்ள ஏவுகணையைக் கொண்டு 300 கிமீ உயரத்தில் பறந்த இந்திய செயற்கைக்கோளை ராணுவ விஞ்ஞானிகள் முதல் முயற்சியிலேயே துல்லியமாக தாக்கியது விண்வெளி பாதுகாப்பின் இமாலய சாதனை.

இந்தத் திட்டத்தில் பங்களித்த 300 டிஆர்டிஓ விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் படித்தவர்கள் என்பதில் இந்தியக்கல்வி நிறுவனங்களின் பலத்தைப்பற்றி நாம் பெருமைப்படலாம்.

சோதனை முயற்சிக்கு 300 கிமீதாழ்வுப்பாதையில் பறந்த செயற்கைக்கோளை தேர்ந்தெடுத்ததின் மூலம் தனது பொறுப்புணர்வை இந்தியா நிரூபித்துள்ளது. ஏனெனில் தாக்குதலால் தாழ்வுப்பாதையில் தோன்றும் விண்வெளிக் குப்பைகள் காலப்போக்கில் வளிமண்டல எதிர்விசையினால் அகற்றப்படும். உயர்பாதையில் இப்படிப்பட்ட சூழல் இல்லை.

புதிய உலக வரிசை

இந்த முக்கிய மைல்கல், செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்பம் கொண்ட உலக நாடுகளில் நான்காவது நாடாக இந்தியாவை உயர்த்தி இருக்கிறது. விண்வெளி பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்கும் உலக அமைப்புகள் இந்தியாவையும் இனிமேல் கலந்தாலோசிக்கும் வகையில் நமது முக்கியத்துவம் கூடும்.

இந்தியாவின் பதிலடி பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், நமது செயற்கைக்கோள்களின் மீது கைவைக்க பிற நாடுகள் தயங்கும்.

இதனால் இந்திய செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

வழக்கமாக தாழ்வுப்பாதையில் பயணிக்கும் உளவு செயற்கைக் கோள்களை பிற நாடுகள் ஏவுவது குறையும்.

எல்லாவற்றையும் விட, பாடப் புத்தகங்களோடு கனவுகளையும் சுமந்து அலையும் கால்சட்டை சிறுவர்களுக்கும், இரட்டை ஜடை சிறுமிகளுக்கும், இந்தியர்களால் சாதிக்க முடியும் என இறக்கைகள் கொடுத்திருக்கிறது டிஆர்டிஓ.

டாக்டர் வி.டில்லிபாபு,

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி.

போர்ப் பறவைகள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x