

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுசதி தொடர்பான மனுவை தான் விசாரிக்க முடியாது என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பணீந்த்ரா மறுப்பு தெரிவித்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ‘1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்துக்குவித்தார். அந்த பணத்தை சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோரின் மூலம் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்’ என அவர் மீது கூட்டுசதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதா தரப்பிலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பிலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அதில் ‘‘ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நூறு சதவீதம் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இது குறித்து எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை.
மேலும் அரசு தரப்பு சாட்சிகளிடம் பெற்ற வாக்குமூலத்திலோ, குறுக்கு விசாரணையிலோ ஜெயலலிதா மீது யாரும் இத்தகைய குற்றச்சாட்டை கூறவில்லை. அதே போல ஜெயலலிதாவுடன் கூட்டுசதியில் ஈடுபட்டதாக கூறப்படும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் எந்த விதத்திலும் அது பற்றிக் கூறவில்லை. எனவே, இவ்வழக்கில் ஜெயலலிதா மீது புனையப்பட்டுள்ள ‘கூட்டு சதி' குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமோ,ஆவணங்களோ இல்லை.ஆதலால் உடனடியாக அவர் மீதான ‘கூட்டு சதி' குற்றச்சாட்டை நீக்க வேண்டும்''கோரப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, ‘சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிக்கட்டத்தில் இம்மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.மேலும் வழக்கின் இறுதி தீர்ப்பின் போது இம்மனு மீது தீர்ப்பு வழங்குவதாக கூறி ஒத்தி வைத்தார்.
மேல்முறையீடு
அதனைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இம்மனுவை மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு கடந்த 27-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜாவத் ரஹீம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு வாதத்தைக் கேட்ட அவர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இதனிடையே கடந்த 31-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
எனவே நீதிபதி கே.என்.பணீந்த்ரா முன்னிலையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி பணீந்த்ரா, ‘‘நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக சட்டத்துறை செயலாளராக இருந்தபோது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறேன். அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளில் கையெழுத்தி ட்டுள்ளேன்.
ஏற்கெனவே இவ்வழக்கில் தொடர்புடைய நான் இந்த மனுவை விசாரிப்பது நியாயமாக இருக்காது. ஆதலால் இந்த மனுவை வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்'' எனக்கூறி வழக்கை தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.