Last Updated : 30 Mar, 2019 11:45 AM

 

Published : 30 Mar 2019 11:45 AM
Last Updated : 30 Mar 2019 11:45 AM

"ரொம்ப நாளைக்கு முன்னாடியே இந்த முடிவை எடுத்திருக்கணும்": தந்தையின் முடிவை வரவேற்ற சோனாக்‌ஷி சின்ஹா

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ள சத்ருகன் சின்ஹா நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று அவரின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவில் நீண்டகாலம் பணியாற்றியவர், மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா. பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.பி. ஆனவர். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடி குறித்தும், ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சத்ருகன் சின்ஹா. எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களிலும் அவர் பங்கேற்று வந்தார். இதனால், பாஜக தலைமைக்கும் சத்ருகன் சின்ஹாவுக்கும் இடையே அதிருப்தி இருந்து வந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா சேர உள்ளதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் போட்டியிட்டு வந்த பாட்னா சாஹிப் தொகுதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்பின் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். முறைப்படி ஏப்ரல் 6-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின் சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், "மிகுந்த வலியுடன் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன். பாஜகவில் சர்வாதிகாரம் நடந்து வருகிறது. ஆதலால் நான் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புகிறேன். நேரு, காந்தி குடும்பம்தான் தேசத்தை கட்டமைத்த உண்மையான குடும்பங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், "ராகுல் காந்திதான் நாட்டின் எதிர்காலம், நம்பிக்கை. என்னுடைய நண்பர் லாலு பிரசாத் யாதவின் ஒப்புதலுக்குப் பின் வியத்தகு சம்பவங்கள் நடந்துள்ளன. ஜெய் பிஹார் ஜெய் ஹிந்த். புதிய வழி, புதிய நண்பர், புதிய தலைமை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளது குறித்து அவரின் மகளும், நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''என் தந்தை காங்கிரஸ் கட்சியில் இணைய எடுத்துள்ள முடிவை நீண்ட காலத்துக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். மிக தாமதமாக எடுத்துள்ளார். ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் காலத்தில் இருந்து என் தந்தை பாஜகவில் பணியாற்றி வருகிறார்.

கட்சியின் மீதும், தலைவர்கள் மீதும் என் தந்தை மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கட்சிக்குள்ளும் என் தந்தைக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கும், மூத்த தலைவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படவில்லை.

என் தந்தை பாஜகவில் இருந்து விலக எடுத்த முடிவு சிறிது தாமதம்தான்.  எதிர்க்கட்சியில் சேர்ந்து என் தந்தை  பல நல்ல செயல்கள் செய்வார். அவர் எந்தவிதமான அழுத்தத்துக்கும் ஆளாக மாட்டார் என நம்புகிறேன்'' என சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x