

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் நேற்று காலி செய்தார்.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும் போது, “அஜித் சிங் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை மத்திய பொதுப்பணித் துறையினரி டம் ஒப்படைத்து விட்டார். எனினும், காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கூடுதலாக 118 நாட்கள் தங்கியிருந்ததற்கான அபராதத் தொகையை (ரூ.7 லட்சத்துக்கும் மேல்) இன்னும் செலுத்தவில்லை” என்றார்.
இதன்மூலம் இந்த விவகா ரத்தில் அஜித் சிங்குக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய அமைச்சராக இருந்த அஜித் சிங், துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட அரசு பங்க ளாவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
மத்தியில் புதிதாக பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான அரசு, அஜித் சிங்குக்கு அரசு பங்க ளாவை காலி செய்யுமாறு கடந்த ஜூன் 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அதை காலி செய்ய மறுத்து வந்தார். இதையடுத்து, அந்த பங்களாவுக்கான மின் சாரம், தண்ணீர் சப்ளைஆகியவை துண்டிக்கப்பட்டன.
இந்த பங்களாவை தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான சரண்சிங்கின் நினைவிடமாக மாற்ற வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் சிங்கின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.