பாஜக தொப்பியை அணிய மறுத்து கழற்றிய அமித் ஷாவின் பேத்தி: வைரலாகும் வீடியோ

பாஜக தொப்பியை அணிய மறுத்து கழற்றிய அமித் ஷாவின் பேத்தி: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது பேத்திக்கு பாஜக  தொப்பியை தலையில் அணிவிக்க முயற்சித்தும் அந்த தொப்பியை கீழே எடுத்துப்போட்டு வேறு தொப்பியை அணிந்து கொண்டது குழந்தை.  இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். குஜாரத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அமித்ஷா இன்று அகமதாபாத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கலுக்கு முன், அமித்ஷா பேரணியில் பங்கேற்று அதன்பின் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். அகமதாபாத் நகருக்கு இன்று வந்த அமித் ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  அமித் ஷாவை வரவேற்க அவரின் குடும்பத்தினரும் காத்திருந்தனர்

அப்போது அங்கு நின்றிருந்த தனது குடும்பத்தார் தூக்கி வைத்திருந்த தனது பேத்தியை தூக்கி அமித் ஷா கொஞ்சினார். அதன்பின் அந்த குழந்தை தலையில் சாதாரண தொப்பி அணிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தொப்பியை கழற்றிய அமித் ஷா பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த தொப்பியை தனது பேத்திக்கு அணிவித்தார்.

ஆனால், அந்தக் குழந்தை அமித் ஷா அணிவித்த பாஜக தொப்பியை அணிய மறுத்து மூன்றுமுறை தலையில் இருந்து கழற்றியது.  அதன்பின் குழந்தை தான் முதலில் அணிந்திருந்த தொப்பியை அணிவித்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

இந்த வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பினரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமித் ஷாவின் பேத்திக்கே பாஜகவின் தொப்பி பிடிக்கவில்லை என்று கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in