Published : 11 Mar 2019 11:38 AM
Last Updated : 11 Mar 2019 11:38 AM

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி உள்பட 3 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் திரால் பகுதியில் உள்ள பிங்கில்ஷ் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்ற ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், காஷ்மீர் போலீஸார் அந்த கிராமத்தை நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினர் கிராமத்தைச் சுற்றி வளைத்ததை  அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, காதை பிளக்கும் சத்தம் கேட்டதாகவும், ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த வீடு தகர்க்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முடாசிர் அகமது கான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அதில் அகமது தற்கொலைப்படைத்தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடித்தனர். தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அதில் அகமது தார் தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் அந்த காரை வாங்கியதும் தெரியவந்தது. 

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த  தீவிரவாதி முடாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியில் உள்ள மிர் மொஹாலா பகுதியைச் சேர்ந்தவர் 23வயதான அகமது கான். பட்டப்படிப்பு முடித்து, ஐடிஐ படித்த அகமது கான் புல்வாமா தாக்குதலுக்கு தேவையான காரை விலைக்கு வாங்கி, அதை ஆதில் அகமதுவுக்கு வழங்கியவர் அகமதுகான்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகளில் அகமது கான் பணியாற்றியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த அகமது கான், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் நூர் முகமது தாந்தரேயுடன் பழகினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாத செயல்கள் அதிகம் நடைபெற நூர்முகமது முக்கியக் காரணமாக இருந்தவர்.

ஆனால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நூர் முகமது கொல்லப்பட்டார். நூர் கொல்லப்பட்டதும், கடந்த 2018, ஜனவரி 14-ம் தேதி அகமது கான் தலைமறைவானார்.

ஆனால், தலைமறைவாக வாழ்ந்து வந்த அகமது கானுடன், தற்கொலைப்படைதாக்குதல் நடத்திய தீவிரவாதி ஆதில் அகமது அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது.

கடந்த ஆண்டு, சன்ஜவானில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலில் அகமது கானுக்குதொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், காஷ்மீரின் லேத்போரா சிஆர்பிஎப் முகாம் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலிலும் அகமது கானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x