

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஐயப்பன் கோயிலில் நடை இன்று திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர விழா பத்து நாட்கள் நடக்கிறது. விழா நிறைவடையும் 21-ம் தேதி வரை கோயில் திறந்திருக்கும். கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கோயில் நடை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும், ஐயப்பன் கோயில் கருவறை கதவில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதால் அதை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி தரமான தேக்கில் புதிய கதவு தயாரிக்கப்பட்டு அதன் மீது 4 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட தகடு பதிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை திறப்பதை முன்னிட்டு புதிய கதவும் இன்று பொருத்தப்படுகிறது. இந்த கதவுக்கான செலவுகளை உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இத்தகவல்களை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்தார்.