Published : 30 Mar 2019 02:16 PM
Last Updated : 30 Mar 2019 02:16 PM

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

கடந்த ஆண்டு நவம்பர் முதல் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து பெரிய பூகம்பம் ஒன்று ஏற்படும் என்று அப்பகுதியில் பரவலாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

நவம்பர் 2018-ல் ம் நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கியதையடுத்து பல்கரின் நரேஷ்வாதி கல்வி மையத்தின் குழந்தைகள் பீதியில் ஆழ்ந்தன.  5-7 வயதுடைய குழந்தைகள் கண்களில் கண்ணீருடன் பீதியடைந்தனர். 5 மாதங்கள் சென்ற பிறகு மீண்டும் நிலநடுக்கங்கள் தொடங்கின, ஆனால் இப்போது இக்குழந்தைகள் அதற்குப் பழகத் தொடங்கி விட்டன.

 

ஒவ்வொரு முறை பூமி குலுங்கும் போதும் குழந்தைகளை வகுப்பறையிலிருந்து பொதுவெளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதைத்தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர்.  ஆனால் கடந்த மார்ச் 1 ம் தேதி பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்ட போது தீபாவளி அணுகுண்டு வெடிப்பது போன்ற ஓசைக் கேட்டது.  அப்போது பெரிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு விரைவில் வெளியேறினார், ஆனல் சிறு குழந்தை மாணவர்கள் வகுப்பறையிலேயே இருந்தனர். அதாவது இதற்கு அவர்கள் பழகி விட்டதையே இது காட்டுகிறது என்கிறது பள்ளி நிர்வாகம்.

 

நலிவுற்ற குழந்தைகள் தங்கிப் படிக்கும் நரேத்வாதி கற்றல் மையப்பள்ளியின் படேல் மற்றும் பல்கார் மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னொரு முறை குலுங்கினால் தாங்கள் வசிக்கும் கட்டிடம் தாங்குமா என்று தெரியவில்லை என்று கூறுகின்றனர்.  பள்ளியின் டைனிங் அறையில் சுவற்றில் ஏற்கெனவே விரிசல்கள் விழத்தொடங்கியுள்ளன. ஹாலின் சரிவுக்கூரைகளைத் தாங்கும் உலோக ராடுகள் ஒவ்வொரு நிலநடுக்கத்தின் போதும் வளைகின்றன. அடுத்த நிலநடுக்கத்தில் கூரை சரியும் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி டெண்ட்களில் குழந்தைகள் தங்க வைக்கப்படுகின்றனர்.

 

மும்பையிலிருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் இருக்கும் பல்கார் மாவட்டத்தில் உள்ளூர் அளவின் படி 1 முதல் 4 என்று பதிவான நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பல்கார் மாவட்டத்தின் 18 கிராமங்கள் அதன் 63,000 ஜனங்கள் ஆகியோர் இதன் தாக்கங்களில் பீதியில் உறைந்து போயுள்ளனர், ஏனெனில் பூகம்ப மையத்தின் கோட்டில் இவர்கள் கிராமங்கள் உள்ளன.

 

இதனையடுத்து டெல்லி நிலநடுக்க மையம் மற்றும் ஹைதராபாத்தின் தேசிய புவிபவுதிக ஆய்வு மையமும் சிறு நிலநடுக்க அளவெடுப்பு சாதனங்களை பொருத்தியுள்ளனர்.  மாவட்ட நிர்வாகமும் வீட்டில் படுத்து உறங்க பயப்படுபவர்களுக்காக தனி முகாம்களை அமைத்துள்ளன. 1300 டெண்ட்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.  மேலும் ஐஐடி மும்பை பொறியாளர்கள் அப்பகுதியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பல்கார் வந்துள்ளனர்.

 

கட்டுமான முறைகள், விதிமுறைகள் ஒழுங்காக அமல்படுத்தப்பட்டிருந்தால் இப்போது இந்தப் பதற்றத்துக்கு வேலையே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த நிலநடுக்கங்களுக்கு நீண்ட காலம் முன்னரே பூகம்ப வாய்ப்புப் பகுதி எண் 3 என்று பல்காருக்கு வழங்கபட்டுள்ளது.  அதாவது எண் 3 என்றால் 6 முதல் 6.5 என்ற ரிக்டர் அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு என்று பொருள். 1993 லட்டூர் பூகம்பம் ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது. எனவே இங்கு பூகம்ப பாதிப்பு தடுப்பு கட்டிட வடிவமைப்புகள்தான் அவசியம். விதிமுறையும் உள்ளது.

 

சிலபல நிலநடுக்கங்களினால் சுவர்களில் விரிசல் சில சந்தர்ப்பங்களில் சுவர் கீழேயும் விழுந்துள்ளது.  பல்காரின் மோசமாகப் பாதிக்கப்பட்ட தஹனு, தலசரி சப் டிவிஷன்களில் சுமார் 1,750 வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

பாம்பே ஐஐடியின் 2011-ம் ஆண்டு ஆய்வின் படி பல்கார் மாவட்டத்தின் 10 லட்சம் பேர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் பலவீனமான வீடுகளில் வசித்து வருகின்றனர். இவை சரிசெய்யப்படவில்லை எனில் பெரிய பூகம்பம் ஏற்படும் போது உயிர்ச்சேதம் பெரிய அளவில் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பல்காரின் இந்த நிலநடுக்கங்களுக்கு பூமிக்கடியில் புவியியல் பாறைப்பிளவினால் டெக்டானிக் நடவடைக்கைகள் துரிதமாகியுள்ளன  என்று நிலநடுக்க ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.  கண்டத்தட்டு நகரும், பாறைப்பிளவு நடவடிக்கை என்றால் சிறு சிறு நிலநடுக்கங்கள்தானே என்று அலட்சியம் காட்ட முடியாது.  கிராமப்புறங்கள் பாதிக்கப்படும் என்று இருந்தால், நகர்ப்புறங்களுக்கும் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதே பொருள்.

 

சில வேளைகளில் பூமிக்கு அடியில் உருளும் சப்தம் கேட்கிறது, சில வேளைகளில் பெரிய வெடிபோட்டது போல் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என் இதயம் என் உடலிலிருந்து வெளியே வருகிறது, குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவும் என்கிறார் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த படேல்.

 

இங்கு பெரும்பாலும் மழையினால் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது, அதாவது, கனமழை பெயதால் பூமிக்கடியில் அதன் மேற்புறத்திற்கு மழை நீர் செல்கிறது.  பாறையை கீழே அழுத்துவதால் பாறைகளில் கண்ணுக்குப் புலப்படா சிறுதுளைகள் அடைக்கப்பட்டு அழுத்தம் அதிகரிக்கிறது. அதாவது நிலத்தடி நீரின் ஒவ்வொரு 10 மீ அதிகரிப்புக்கும் ஈடாக  பாறைத்துளை அழுத்தம் 1 பார் அதிகரிக்கிறது. (பார் என்ற அளவு ஒரு லட்சம் பாஸ்கல்களுக்குச் சமம்)

 

மழைநீரால் ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு ஹைட்ரோ-சீஸ்மிசிட்டி என்று பெயர். ஹைதராபாத்தில் போர்பந்தா புறநகர் பகுதியில் நீர்த்தாக்க நிலநடுக்கங்கள் 2017-ல் ஒரு மாதம் வரை இருந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழக ஆய்வாளர் குசலா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வகை நிலநடுக்கங்கள் பெரும்பாலும் சப்தமிக்கதாக இருக்கும்.  இவை பெரும்பாலும் பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்படும், டெக்டானிக் சீஸ்மிசிட்டி என்பது பூமிக்கு அடியில் சுமார் 60கிமீ ஆழத்தில் ஏற்படுவது.

 

இந்நிலையில் பல்காரில்  மக்கள் அன்றாடம் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். குஜராத் மாநிலம் பூஜை உலுக்கிய பூகம்பம் மகாராஷ்டிரா லட்டூரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களுக்கு முன் கூட்டியே கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பே பெரிய பூகம்பம் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது, ஆனால் ஒருவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

 

அதேபோல்தான் இப்போது பல்கார் பகுதி, எப்போதும் அச்சுறுத்தும் அதாவது இந்தியாவின் நில அமைப்பையே புரட்டிப் போடும் இமாலய பூகம்பம் ஆகியவை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x