Published : 02 Mar 2019 05:06 PM
Last Updated : 02 Mar 2019 05:06 PM

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவை மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தானுக்கு நாளை ரயில் இயக்கப்படுகிறது

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் நிறுத்தப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தன் உயிருடன் கைது செய்யப்பட்டார். இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

டெல்லி மற்றும் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் வரை இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழகளில் இந்த ரயில் இயக்கப்படுவது வழக்கம். கராச்சியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் வரையில் வந்தபோது திடீரென இடையிலேயே நிறுத்தப்பட்டு அதில் இருந்து 16 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். 

இதனிடையே பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டார். இந்திய எல்லையான அட்டாரியில் அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் பிறகு இருநாடுகள் இடையே பதற்றம் சற்று தணிந்துள்ளதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் ரயில் சேவை தொடங்குகிறது.  டெல்லியில் நாளை இந்த ரயில் புறப்பட்டுச் லாகூர் செல்கிறது. அங்கிருந்து நாளை மறுதினம் இந்தியாவுக்கு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x