Last Updated : 13 Mar, 2019 11:32 AM

 

Published : 13 Mar 2019 11:32 AM
Last Updated : 13 Mar 2019 11:32 AM

குறி வைக்கும் பாஜக: ஆட்சி அமைப்பதில் துருப்புச் சீட்டுகளாக மாறும் பிஜேடி, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் கட்சி

மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஆட்சி அமைக்கும் துருப்புச் சீட்டுகளாக பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால், 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில், இந்த மூன்று கட்சிகளை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும் என்று சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி அரசு ஏராளமான திட்டங்களையும், நல உதவிகளையும் செய்துள்ளதாக பிரச்சாரம் செய்தபோதிலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அதிருப்தியும் நிலவுகிறது.

இந்த அதிருப்தியால், வரும் மக்களவைத் தேர்திலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மைக்கு 8 இடங்கள் குறைவாக 264 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சி-வோட்டர்ஸ் கணித்துள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 141 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் உ.பி.யில் முக்கிய மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி அமைத்துள்ள மகாகட் பந்தன் கூட்டணி 80 இடங்களில் 47 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை.

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை மத்தியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் முக்கியப் பங்காற்றுகிறார். ஆனால், மக்களவைத் தேர்தலில் தெலங்கு தேசம் கட்சி 14 இடங்களில் வெல்லவே வாய்ப்புள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 வரை பெறலாம். இந்தக் கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவை. இதனால், தேர்தலுக்குப் பின் பெரும்பான்மை இல்லாத நிலையில் இவர்களிடம் பாஜக ஆதரவு கோருவது கடினமாகும்.

ஆனால், சி-வோட்டர்ஸ் கணிப்பின்படி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்து இந்த முறை 36 இடங்களைக் கைப்பற்றும்.

இதில் ஒய்எஸ்ஆர் கட்சி மட்டும் ஆந்திராவில் 11 இடங்களையும், ஒடிசாவில் பிஜேடி 9 இடங்களையும், டிஆர்எஸ் கட்சி 17 இடங்களில் 16 இடங்களையும் வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்த 3 கட்சிகளும்தான் அடுத்து மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்யும் துருப்புச் சீட்டுகளாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த 3 கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சரிசமமான இடைவெளியைப் பராமரித்து வருகின்றன. இருபெரும் கட்சிகளுடன் மோதல் போக்கையும், நெருக்கமான நட்புறவையும் இந்த 3 கட்சிகளும் கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்த 3 கட்சிகளின் ஆதரவு கரம் நீட்டும் பட்சத்தில் பெரும்பான்மை மட்டுமல்லாமல், அறுதிப் பெரும்பான்மையை நோக்கி நகரலாம். ஆதலால் இந்த 3 கட்சிகளை பாஜக தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கும்.

2019 மக்களவைத் தேர்தல் இன்னும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராகுல் காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான கொள்கை ரீதியான போர் என்று வர்ணிக்கப்பட்டாலும், பாஜக, காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சிகள்தான் தேர்தலுக்குப் பின் யார் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிப்பவர்ரகளாக இருப்பார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை 20 இடங்கள் வரை வெல்லக்கூடும். சிவசேனா கட்சி 14 இடங்களைக் கைப்பற்றலாம் எனத் தெரிகிறது. ஆனால், தேர்தலுக்குப் பின் கட்சிகளிடையே ஏற்படும் மனமாற்றம், தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x