Last Updated : 31 Aug, 2014 04:48 PM

 

Published : 31 Aug 2014 04:48 PM
Last Updated : 31 Aug 2014 04:48 PM

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்ஸ்பிரேஷன் நான்: டி.ராஜேந்தர் விரிவான பேச்சு

"ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், 'எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன்" என்றார் டி.ராஜேந்தர்.

சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க, பத்ரி இயக்கி இருக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

டி.ஆரை பேச அழைத்தவுடன், அவருடைய வழக்கமான பாணியில் மைக்கில் தாளமிட்டு "மைக் டெஸ்ட்" என்றபடி தனது பேச்சைத் தொடங்கினார். முதலில் "எவ்வளவு நேரம் பேச வேண்டும்? எல்லாருக்கும் தொகுப்பாளினி 1 நிமிடம்னு சொன்னாங்க" என்றவுடன் "20 நிமிடங்கள் சார்" என்று கூறவே "20 மினிட்ஸ்.. நன்றி" என்றபடி பேச ஆரம்பித்தார்.

"மன்னிக்க வேண்டும். எவ்வளவு பேச வேண்டும் என்று தெரிந்துக் கொண்டேன் என்றால், அதற்கான விளக்கத்தை பின்னால் தருகின்றேன். நான் சிவனை எப்போதும் மறப்பதில்லை. உலகத்துக்கே ஒரு சிவன். இந்த மேடயில் மூன்று சிவா. ஒரு பக்கம் தொழிலாளர் சம்மேளனம் சிவா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிவா, இன்னொரு பக்கம், நடிகர் எழுத்தாளர் சிவா.. இப்படி மூன்று சிவா இவர்களுக்கு மத்தியில் நான் பேச வேண்டும் என்று உங்களுக்கு ஒரு அவா. ஆனால், இந்த திரையுலகம் தான் எங்களுக்கு எல்லாம் போட்டது புவா.

இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் விமல், சிவா, சதிஷ், சிம்ஹா மற்றும் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் விசில் சத்தம் வரும் என்பதற்காக பேசுபவன் அல்ல. பேசினால் விசில் சத்தம் வர வேண்டும். என்னை உருவாக்கிய இந்த திரையுலகையும், தயாரிப்பாளர்களையும் நான் எண்ணிப் பார்க்க கூடியவன்.

நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் இன்ஷா அல்லாஹ். மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் எல்லாம் வல்ல இறைவன். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் டி.ராஜேந்தர் என்று போட்டார்கள். எம்.ஏ என்று போடவில்லை. எனக்கு வேண்டாம். ஏனென்றால் அது நான் படிச்சு வாங்கின பட்டம். சினிமாவில் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால், எனது பெயருக்கு பின்னால் நான் பட்டம் போட்டுக்கிட்டதே இல்லை. நான் பட்டத்தை எல்லாம் நம்புறதில்லை. சினிமாவில் பட்டம் எல்லாம் அப்போ அப்போ பறந்துவிடும். இது தான் உண்மை. பட்டம் ஆகிவிடும் சமயத்தில் தம்பட்டம். நான் படிச்சு வாங்கின பட்டம் மட்டும் தான் எனக்கு நிரந்திரம்.

யார் நம்மளை உருவாக்கினார்களோ, அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். என்னை இந்த விழாவிற்கு வருவதற்கு இம்ப்ரஷ் பண்ணியது ஒரு இதயம். அவர் இயக்குநர் பத்ரி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு டி.ஆர் வர்றாரா, சிங்கப்பூரில் இருந்து வருகிறேன் என்று என் தாய் சொல்றாங்க. அவருடைய ஆசைக்காகவது நீங்க வரவேண்டும் என்று சொன்ன வார்த்தை என்னை இங்கே வரவைத்தது.(கண் கலங்கியபடி) ஒரு தாயின் சபதம் எடுத்தவன், தாய் தங்கை பாசம் எடுத்தவன், என் தங்கை கல்யாணி எடுத்தவன், என் தங்கைக்கு ஒரு கீதம் எடுத்தவன் இப்படி தாய்மார்களுக்காக படம் எடுத்தவன். அந்த தாய் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி, என்னை அழைத்தார்.

சினிமாவில் வெற்றி தோல்வி எல்லாம் மாறி மாறி வரும். ஜெயித்தவுடன் காலரை தூக்கி விடக் கூடாது. I NEVER RISE MY COLOR. BCOS I AM A VERY GOOD SCHOLAR. நான் ஒரு சாதனையாளன் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. PROPERTY MEANS THE APPRECIATION WILL BE THERE, THE DEPPRECIATION WILL BE THERE. ACCOUNT MEANS THE PROFIT WILL BE THERE, THE LOSS WILL BE THERE. LIFE MEANS THE UP AND DOWNS WILL BE THERE. சக்கரம் மேலேயும், கீழேயும் மாறி மாறி வந்தால் தான் ஓடும். நான் மேலே இருப்பேன் என்று சொன்னால், ஒரே இடத்தில் நிற்கும். இது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம், சுத்துக்கிட்டே இருக்கணும்.

LIFE IS A GAME. SOMETIMES ONLY WE WILL GET THE NAME, WE WILL GET THE FAME. SOMETIMES WE WILL FACE ASHAME. BCOS LIFE IS A GAME. I AM READY TO EXPOSE MYSELF AS A LITERATE. I NEVER EXPOSE MYSELF AS A EDUCATE PERSON IN THE FILM INDUSTRY. I WILL SAPRASS MYSELF. I WILL UPRESS MYSELF. I WILL DEPRESS MYSELF. நான் ரொம்ப சாதாரணமானவனா, தலைக்கு எண்ணெய் கூட போடறதில்லை. ஆனால், இந்த தலை நினைச்சுப் பார்க்குது என்னை. போடறிதில்லை எண்ணெய், நினைச்சுப் பார்க்குது என்னை.

'ஒரு தலை ராகம்' படத்துல வந்த என்னை, இன்றைக்கு 'ஒரு தலை காதல்' வர்றேன். என்னுடைய மகன் சிம்பு கதாநாயகனாக இருக்க கூடிய காலத்தில் 'வீராசாமி' படத்தில் நடித்தேன். அவரை நான் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க கூப்பிடவில்லை. யாரோட படத்துக்காக நட்புக்காக அவர் போய் நடிப்பாரு. ஆனால் நான் கூப்பிடவில்லை. உடனே தலைக்கனம் என்று நினைக்க கூடாது. தன்னம்பிக்கையோட இலக்கணத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்றேன்.

என்னை மதிக்காத இடத்திற்கு நான் போகவே மாட்டேன். என்னை மதித்தால், மண் குடிசையைக் கூட மதிப்பேன். என்னை மதிக்காதவன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மவுண்ட் பேட்டனாக இருந்தாலும் சரி போக மாட்டேன். அது ஒரு தில்.

காலுக்கு செருப்பு கூட வாங்க முடியாத என்னை, சிறப்புரை ஆற்றக் கூடிய அளவிற்கு என்னை சினிமா உலகம் ஆக்கியிருக்கிறது என்றால் ஆண்டவனுக்கு நன்றி. ஆண்டவனுக்கு அப்புறம், திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த ரசிகர் பெருமக்களுக்கு நன்றி.

எனக்கு கொடுத்திருக்க கூடிய நேரம், ITS NOT ENOUGH TIME TO EXPRESS MY VIEWS. நான் இங்கே கொஞ்சம் நேரம் இயக்குநர் விக்ரமன் கிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்களும் வைத்திருப்பது தாடி, நானும் வைத்திருப்பது தாடி, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் தேடி, நீங்கள் அருகே அமர்ந்திருக்கிறீர்கள் நாடி, நான் பிடித்துப் பார்த்தது உண்டு உங்களது நாடி, திரையுலகில் வெற்றியே தோல்வியோ நான் துவண்டு போனதில்லை வாடி, காரணம் நான் பல கட்டங்களில் நின்றிருக்கிறேன் வாகை சூடி. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் ONLY THE TIME. I MEAN THE நேரம்.

நேரம் அதை பிரித்து பார்த்தால் அதில் ரம் இருக்கிறது. உலகத்திலே டிரம் அடிக்கிறவனை விட தம் அடிக்கிறவன் ரொம்ப ஸ்டைலா அடிப்பான். உலகமே என்னமோ அவன் கையில் இருக்கிறது மாதிரி. (தம் அடிக்கும் சைகை காட்டிவிட்டு). படைத்தவன் மேலே இருக்கிறான், அவன் மேலே பார்த்து ஊதுறான். மேலே இருக்கிறவன் ஊதினால் இவன் போயிடுவான். நான் தம் அடிக்க மாட்டேன், அதனால தான் சொல்றேன். நான் அடிக்கிறதில்லை தம், நான் ஏத்துறதில்லை ரம். அதனால இந்த மக்களால் என்னை கட்டவில்லை ஓரம். அதனால் தான் தோல்வி வந்தால் எனக்கு வருவதில்லை பாரம். என்னை யாரும் கட்ட முடியாது ஓரம். என்னுடைய படங்கள் ஒடி இருக்கிறது அத்தனை வாரம். பல வாரம். என்னுடைய உயிருள்ள வரை உஷா திரைப்படம் ஆந்திராவில் டப் செய்து 2 வருஷம் ஓடியது. எப்பூடி. எங்கயும் நிப்போம்ல.

நீ ஒரு டண்டணக்கா, உனக்கு அவ்வளவு தான் தெரியும் என்றார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் WORKING WITH டி.ராஜேந்தர் ONCE UPON A TIME. HE WAS WORKING WITH ME AS A KEYBOARD PLAYER. ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பார்த்து என்ன சொன்னால் என்ன? நான் சம்பாதித்து இருக்கிறேன் டன் கணக்கா. இவ்வளவு இருந்து எனக்கும் ஆப்புன்னா, உனக்கு எந்தளவிற்கு வைப்பான் ஆப்பு யோசிச்சுக்கோ. இவ்வளவு திறமை இருக்கிறவனை பண்ணுவான் கிண்டலு.

எனக்கு கொடுத்த 20 நிமிஷத்தில் இருக்கிறது 8, உன்னுடைய டார்க்கெட்டை நீ எட்டு, வைச்சுராத லெட்டு, வாங்கணும் கைத்தட்டு, பேசணும் பட்டு பட்டு, அப்படியே தெறிக்கணும் பட்டு பட்டு, இந்த படம் ஓடி PRODUCERக்கு குவியணும் துட்டு துட்டு, அது அப்படியே ஆகணும் திருப்பதி லட்டு லட்டு, பணத்துல குவிக்கணும் கட்டு கட்டு. இன்னும் இருக்கிற 8 நிமிஷத்தில் வேற எதுவும் பேசக் கூடாது.

சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தால் YOU ARE GREATனுவான். மார்க்கெட் கம்மியாச்சுன்னா திறக்காத கேட்-னுவான். இது தான் உண்மை. கொஞ்சூண்டு WATER PLEASE.

இப்போ டயட்ல இருக்கேன். சினிமால ஒண்ணு நடிக்கணும். இல்லனா தடிக்கணும். ஒரு தலை காதல் படத்துல நடிச்சுட்டு இருக்கேன். "என் அருமை தமிழ்நாட்டு மக்களே" எல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது இங்கே. டிரெண்ட் சேஞ்ச். கலகலப்பா எடுக்கணும். எனக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. எனக்கு INTEREST கிடையாது. எப்போதுமே இசையிலே இருப்பேன்.

நாட்டில் எல்லாவற்றிலும் சூது இருக்கிறது. அரசியலிலும் சூது இருக்கிறது. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் அடிச்சுக்கிற மாதிரி தெரியும். அவர்களுக்குள் ஒரு UNDERSTANDING இருக்கும். யாருக்குமே தெரியாது.

இன்றைக்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுத்தால், திரையரங்கிற்கு பெண்கள் வருவதில்லை. காரணம் டிக்கெட் விலை. ஒரு வாரத்தில் 8 படங்கள் ரிலீஸானால் எப்படி ஓடும். மலை போல் படங்கள் குவிந்தால் படங்கள் எப்படி ஓடும். பெண்கள் மையப்படுத்திய படங்கள் டிக்கெட் விலையை குறைத்தால் மட்டுமே ஓடும். என்னுடைய படங்களுக்கு திருட்டு வி.சி.டி வந்த போது, வீதிகளில் இறங்கி கடையை உடைத்தேன். எத்தனை கேஸ் தெரியுமா? மூன்று முதலமைச்சர்களுக்கு எதிராக இறங்கி போராடினேன் என்றால் இழந்து இருக்கிறேன் அத்தனை கோடி. அதனால்தான் துணிச்சலாக நிற்கிறான் இந்த தாடி. அதனால் டி.ஆர் பேசுகிறான் என்றால் கூட்டம் நிற்கிறது கூடி.

கர்நாடகாவில் ஒரு திருட்டி வி.சி.டி காட்டுங்க. முடியாது. பயப்புடுகிறான். ஆந்திராவிலும் கிடையாது. ஏனென்றால் டிக்கெட் ரேட் கம்மி. மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் 64 கோடி வசூல். மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மூன்று நாட்களுக்கு ஓடினால் படமா. படம் போடுகிறார்கள் அத்தனை கோடி, படத் தயாரிப்பாளரோ தெரு கோடி. என்ன வெற்றி.

கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியாம பாடணும், புரியாம பண்ணனும், அவ்வளவு தானே. பண்றேன்யா.. சினிமாவில் எப்படி சம்பாதிக்கணும் என்று ரூட் போட வேண்டும். சினிமா அழிஞ்சுட்டு இருக்கு. ஆந்திரா, கர்நாடகாவில் திருட்டு வி.சி.டி ஒழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒழிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியும். முதல்வர் பார்வைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். உங்களால் பேச முடியவில்லையா. அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.

குறுக்கு வழியில் போனால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். நேர்மையாக இருந்தால் முடியாது" என்றார் டி.ராஜேந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x