

ஜம்முவில் கையெறிகுண்டு தாக்குதல நடத்தியவர்களைத் போலீஸ் தீவிரமாக தேடி வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்முவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு காவல்துறை தலைவர் எம்.கே.சின்ஹா விரைந்தார். உடனடியாக அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையைக் கட்டுக்குள் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் சின்ஹா ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
''ஜம்மு நகரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகே நடைபெற்றது ஒரு கையெறி குண்டுவெடிப்பு சம்பவம். இக் குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 18 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்புக் காட்சிகள் அரங்கேறிய பி.சி.சாலை தற்போது போலீஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு பகுதிகளில் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இக்குண்டுவெடிப்புக்குக் காரணமாவர்களை தேடி போலீஸ் படையினர் மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், யாரோ ஒருவர் கையெறி குண்டுகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பொதுமக்கள் 18 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி (ஜி.எம்.சி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்குண்டுவெடிப்பின்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (எஸ்ஆர்டிசி) பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி தெரிவித்தார்.