

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சிபிஐ, பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் மீது, ஐஎஸ் ஆதரவாளர்கள் தனிமனிதர்களாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்லா பாசித், அப்துல் காதிர். இவர்கள் இருவர் மீதும், முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டில் தேசிய விசாரணை முகமை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கைது செய்தது. தற்போது இருவரும் திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கின்றனர்.
இதற்கிடையே துணை குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் என்ஐஏ தாக்கல் செய்தனர். அதில் அப்துல்லா பாசித், மதின் அஜிஸ் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் மதின் அஜிஸ் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம். ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மதின் அஜிஸை கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அமெரிக்க எப்பிஐ கைது செய்தது. மேலும், இவர் டலாஸ் நகரில் மிகப்பெரிய தாக்குதலுக்கும் திட்டமிட்டருந்தார் என அமெரிக்க எப்பிஐ கண்டுபிடித்தனர் இவருடன் பாசித்துக்கு தொடர்பு இருந்துள்ளது.
என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் பாசித்தை தொடர்பு கொண்ட அஜிஸ், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுஜைபா என்பவரின் செல்போன் எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் செய்தார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், பஞ்சாப், டெல்லி, பிஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர். அப்போது, இந்தியாவில் தனிமனிதராக தாக்குதல்(லோன் உல்ப் அட்டாக்) நடத்த வேண்டும் என்று பாசித்துக்கு ஹுஜைபா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவையான நிதியை தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் பாசித்துடன் உறுதியளித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல், தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவதற்காக வாகனங்கள் வாங்க பாசித்துக்கு நிதியுதவியை ஹுஜைபா அளித்துள்ளார்.
இவர்கள் இருவரின் திட்டப்படி, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், இந்துக்கள் அதிகமாக கூடுமிடம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்களை உருவாக்கவும், , இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்யவும் பாசித்துக்கு ஹுஜைபா அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு ஏற்றார்போல, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பாசித் வங்கிக் கணக்கில் ரூ.49 ஆயிரத்தை ஹூஜைபா டெபாசிட் செய்துள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு பணமும், ஆயுதங்களையும் பாசித் வழங்கியுள்ளார்.
ஆனால், இந்த இரு இளைஞர்களும் டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவிடம் சிக்கிக்கொண்டு அனைத்து விஷயங்களையும் தெரிவித்தனர்.
இதையடுத்து, தான் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய அப்துல்லா பாசித், ஹூஜைபாவை தொடர்பு கொண்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதன்பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாறுவேடத்தில் டெல்லி வந்த அப்துல்லா பாசித்தை டெல்லி போலீஸார் கைது செய்ய முயன்ற போது தப்பினார். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.