

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு சனிக்கிழமை வெளியாக இருந்ததால் பெங்களூரில் வியாழக்கிழமை இரவு முதல் மாநகர காவல் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ஹரிசேகரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 5 அடுக்குகளாக பலப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் பெங்களூர் தமிழக எல்லையோரமான அத்திப்பள்ளியில் பலத்த வாகன சோதனையை போலீஸார் மேற்கொண்டனர். கட்சிக் கொடி, கரைவேட்டி கட்டியவர்களை நகருக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினர்.
இதையறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பட்டாசுகள், இனிப்புகள் சகிதமாக சித்தூர் வழியாகவும் மாதஸ்வரன் மலை வழியாகவும் பெங்களூருக்குள் நுழைந்தனர். இதனால் பெங்களூரில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.
தமிழக அமைச்சரவையைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவே பெங்களூர் வந்தனர்.
அவர்கள் விடுதிகளில் இருந்து நீதிமன்ற வளாகத்துக்கு வருவதற்கான நுழைவுச்சீட்டுகளை பெங்களூர் மாநகர ஆணையரிடமிருந்து பெற்றனர். ஒரு சீட்டில் நான்கு பேர் சென்றனர். அவ்வாறு பலர் சென்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா வரை வழிநெடுக ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஜெயலலிதா வந்திறங்கிய ஹெச்.ஏ.எல். பழைய விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாராவுக்குச் சென்ற தமிழக அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் அனைவரும் எலக்ட்ரானிக் சிட்டி சந்திப்பில் தடுத்து நிறுத்தப்பட்டு சுமார் 3 கிமீ தூரத்துக்கு நடந்து செல்ல வலியுறுத் தப்பட்டனர். இதனால் கடும் வெயிலிலும் அனைத்து முக்கியப் பிரமுகர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு நடந்து வந்தனர்.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதேபோல செய்தியாளர்கள் அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் நிறுத்தப்பட்டனர். மேலும், நீதிமன்ற வளாகத்துக்குள் அமைச்சர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் சுமார் 500 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் குற்றவாளிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 24 பேர் மட்டுமே நீதிமன்ற கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இதுதவிர 110 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக பரப்பன அக்ரஹாரா பகுதியை போலீஸார் கண்காணித்தனர். இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 6000 போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.