

எதிர்க்கட்சிகள் என்னை நீக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்; நானோ தீவிரவாதம், வறுமை மற்றும் ஊழலை சுத்தமாக துடைத்தெறிய முயற்சிக்கிறேன் என்று மோடி பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அங்கு கல்புர்கி நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
''125 பேரின் ஆசிர்வாதத்தைப் பெற்ற ஒரு நபர் மற்றவர்களை பார்த்து பயப்பட தேவையில்லை. பிப்ரவரி 26ல் பாகிஸ்தானில் தீவிரவாத முகாமை இந்திய விமானப் படை தகர்த்துள்ளதன்மூலம் உலகமே ஒரு புதுவகை வீரத்தைப் பார்த்துள்ளது. இது மோடி உடையது மட்டும் அல்ல, 125 கோடி மக்களின் தைரியம்.
எதிர்த்கட்சிகளின் மெகா கூட்டணி ஒரு கலப்பட கூட்டணி. மக்கள் விரும்புவது உறுதியான ஒரு அரசாங்கத்தைத்தான் தான்.
கர்நாடகா மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமியோ ரிமோட் கண்ட்ரோல்டு சி.எம்.ஆக இருக்கிறார். முதுகில் குத்துபவர்களால் இங்கு உருவாகி இருப்பதுதான் காங்கிரஸ் ஜனதா தளக் கூட்டணி ஆட்சி.
இங்குள்ள மாநில அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ''பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி'' திட்டத்தை அமல்படுத்த அவர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு சுவரை மாநில அரசு எழுப்புமேயானால் விவசாயிகள் அதை நிச்சயம் இடித்துத்தள்ளிவிடுவார்கள்.''
இவ்வாறு கர்நாடகா பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.