அத்வானிக்கு சீட் வழங்கப்படுமா?- காந்தி நகரில் அமித் ஷா போட்டியிட பாஜக தொண்டர்கள் வேண்டுகோள்

அத்வானிக்கு சீட் வழங்கப்படுமா?- காந்தி நகரில் அமித் ஷா போட்டியிட பாஜக தொண்டர்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், கடந்த 6 முறைகளுக்கும் மேலாக இங்கு எம்.பி.யாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை சீட் வழங்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

குஜராத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து போட்டியிட்டு வருகிறார். 1996-ம் ஆண்டு மட்டும் போட்டியிடவில்லை. இதுவரை அத்வானி காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வென்றுள்ளார். தற்போதும் காந்தி நகர் எம்.பியாகவே எல்.கே.அத்வானி இருக்கிறார்.

காந்தி நகர் தொகுதியில் காந்தி நகர் வடக்கு, கலோல், சனாந்த், காட்லோடியா, வேஜல்புர், நாரான்பூரா, சபர்மதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.

இந்நிலையில் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை போட்டியிட வைக்கக் கோரி தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமையில் காந்திநகர் பாஜக தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும், தலைவர்களிடமும் கருத்துகளைக் கேட்டு வருகிறது.

இதுகுறித்து வேஜல்பூர்  பாஜக எம்எல்ஏ கிஷோர் சவுகான் கூறுகையில், "பாஜக தொண்டர்கள் கட்சியின் தலைவர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியில்  போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள். நானும்கூட இந்த கோரிக்கையை வைக்கிறேன், அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். காந்தி நகர் தொகுதிக்கு அமித் ஷாவைத் தவிர்த்து வேறு யாரும் தகுதியான வேட்பாளராக இருக்க முடியாது என்று கருதிகறோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சர்கேஜ் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி நகரில் அமித் ஷா போட்டியிடக்கோரி, நாரானாபுரா, சனாந்த், சபர்மதி ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமையிடம் கூறியுள்ளார்கள் என்று பாஜக வட்டாரம் தெரிவிக்கிறது.

குஜராத் பாஜக செய்தித்தொடர்பாளர் பாரத் பாண்டியா கூறுகையில், "காந்திந கரில் யார் போட்டியிட வேண்டும், யார் வேட்பாளர் என்பதை கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும். இப்போதுள்ள நிலையில், யாருக்கு வாய்ப்பு எனக் கூற முடியாது " எனத் தெரிவித்தார்.

இந்த முறை காந்தி நகரில் போட்டியிட மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது வேறு தொகுதி ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in