Last Updated : 06 Mar, 2019 03:57 PM

 

Published : 06 Mar 2019 03:57 PM
Last Updated : 06 Mar 2019 03:57 PM

பாலகோட்டில் மதரஸா கட்டிடங்கள் இன்னும் முழுமையாக இருக்கிறது: சாட்டிலைட் படங்கள் ஆதாரங்களுடன் ராய்ட்டர்ஸ் செய்தி

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்த போது ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பு நடத்தி வரும் சமயப்பள்ளிக் கட்டிடம்  வடகிழக்குப் பாகிஸ்தானில் இன்னும் முழுமையாக அப்படியே உள்ளது.

 

இந்தியா தரப்பில் பாலகோட் தாக்குதல் பற்றி கூறிய போது ஜெய்ஷ் இஸ்லாமிய குழுவின் பயிற்சி முகாமை அழித்ததாகத் தெரிவித்திருந்தது. மேலும் பல தீவிரவாதிகள் பலி என்றும் கூறியிருந்தது.

 

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் தனியார் சாட்டிலைட் ஆபரேட்டர் பிளானெட் லேப்ஸ் இந்தப் படங்களை எடுத்துள்ளது. அதாவது மார்ச் 4ம் தேதியன்று, இந்தியத் தாக்குதலுக்கு 6 நாட்களுக்குப் பிறகும் அந்த இடத்தில் 6 கட்டிடங்கள் அங்கு முழுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

 

இதுவரை இதுபோன்ற உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் இமேஜ்கள் பொதுவெளிக்குக் கிட்டியதில்லை. இந்தப் படங்களில் மத்திய அரசு தாக்கியதாகக் கூறப்படும் அதே கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

 

ஏப்ரல் 2018-ல் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் காட்டப்பட்ட அதே நிலைகள் அப்படியே இந்தப் படங்களிலும் இருக்கின்றன. கட்டிடங்களின் மேற்கூரையில் கூட கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகள் எதுவும் இல்லை. சுவற்றில் பிளவுகள் இல்லை. மதரசா அருகே உள்ள மரங்கள் சாய்ந்ததாகக் கூட அறிகுறி இல்லை என்கிறது ராய்ட்டர்ஸ் ஆய்வு.  சுருக்கமாக வான் வழித்தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இந்த நிலைகளின் மீது இல்லை என்கிறது இந்தப் புகைப்படங்கள்.

 

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் மின்னஞ்சல் மூலம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் எதுவும் வரவில்லை.

 

இது தொடர்பாக கிழக்கு ஆசிய ஆயுதப் பெருக்கத் தடை திட்ட அமைப்பின் இயக்குநர் ஜெஃப்ரி லூயிஸ் கூறும்போது, ‘இப்போது வெளியாகியுள்ள ஹை-ரிசல்யூஷன் சாட்டிலைட் படங்கள் காட்டுவதின் படி வெடிகுண்டினால் சேதம் எதுவும் ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லை’ என்று கூறியுள்ளார்.

 

மேலும் அவர் கூறும்போது, “தாக்குதல் வெற்றிகரமாக இருந்திருந்தால்,  பயன்படுத்திய வெடிகுண்டுகள் பற்றி நமக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மட்டத்தில் கட்டிடங்கள் சேதமடைந்திருக்க வேண்டும், ஆனால் இங்கு எதுவும் அப்படித் தெரியவில்லை” என்றார்.

 

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x