

மறைந்த மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. அம்பரீஷின் மனைவியும் தென்னிந்திய திரைப்பட நடிகையுமான சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கன்னட நடிகரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அம்பரீஷ் கடந்த ஆண்டு நவம்பரில் காலமானார். பெங்களூவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா தொகுதியிலிருந்து அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஊடகங்களிடம் இன்று சுமலதா தெரிவித்ததாவது:
''மாண்டியா தொகுதி மக்கள் அம்பரீஷ் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர். மாண்டியாவுக்கான அவரது திட்டத்தையெல்லாம் நான் முன்னெடுக்க விரும்புகிறேன். அத்தொகுதியில் நான் சுயேச்சையாகவே போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தெரிவித்தது உண்மைதான். ஆனால் மாண்டியா தொகுதியைப் பொறுத்தவரை அங்கு காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாமல் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கியுள்ளனர்.
ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்துகொண்டதில் மாண்டியா உள்ளிட்ட 8 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கியுள்ளனர். மீதியுள்ள 20 தொகுதிகளில்தான் காங்கிரஸ் நிற்கிறது.
அம்பரீஷின் மனைவியாகிய நான் அவரது தொகுதியான மாண்டியாவின் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன். அதனால்தான் அதே தொகுதியில் நான் சுயேச்சையாகப் நிற்பதென முடிவு செய்துள்ளேன்''
இவ்வாறு சுமலதா தெரிவித்தார்.
மாண்டியாவில் முதல்வரின் மகன்
தற்போது மாண்டியா தொகுதியைக் கைப்பற்றியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி, கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகிலை (29) அங்கு வேட்பாளராக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.