Published : 09 Mar 2019 12:39 PM
Last Updated : 09 Mar 2019 12:39 PM

கடந்த 4 ஆண்டுகளில் சிறு,குறு தொழில்களில் 3.32 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவானது : சிஐஐ ஆய்வில் தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளது என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, இந்த அறிக்கையை சிஐஐ வெளியிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், அதைக் காட்டிலும் 13.9 சதவீதம் கூடுதலாக அதாவது 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில்(2015-16 முதல் 2018-19வரை) உருவான புதிய வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா மாநிலங்கள்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 73 சதவீத வேலைவாய்ப்புகள் குறு தொழில் நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், அதிகரிப்பிலும் 70 ஆயிரத்து 941 நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு தொழில் தொழில் நிறுவனங்கள், கடந்த 4 ஆண்டுகளில் அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் என்றாலும், 17 சதவீதம் பேர்களுக்கு எந்தவிதமான புதிய வேலைவாய்ப்பும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 97,286(29.27 சதவீதம் அதிகம்) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்தார்போல் குஜராத்தில் 47 ஆயிரத்து879, வேலைவாய்ப்புகளும், தெலங்கானாவில் 32 ஆயிரத்து 982 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் 28 ஆயிரத்து 542 புதிய வேலைவாய்ப்புகளும், தமிழகத்தில் 18,210 புதிய வேலைவாய்ப்புகளும், மத்தியப்பிரதேசத்தில் 18 ஆயிரத்து 74, ஆந்திராவில் 16 ஆயிரத்து 34, கேரளாவில் 15 ஆயிரத்து 206 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிறமாநிலங்கள் சேர்ந்து,  58 ஆயிரத்து 181 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவின்படி அதிகமாக அதாவது 73 சதவீதம், 2 லட்சத்து 40 ஆயிரத்து 713 புதிய வேலைவாய்ப்புகள் குறுந்தொழில்கள் மூலம் 4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் மூலம் 23 சதவீதம் நிகர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, நடுத்தர தொழில்கள் மூலம் 4 சதவீதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

துறைரீதியாகப் பிரித்துப் பார்த்தால், விருந்தோம்பல், சுற்றுலாத்துறை மூலம் 12 சதவீதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜவுளித்துறை, ஆடைதயாரிப்பு, உலோக தயாரிப்பு ஆகியவை மூலம் 8 சதவீதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இவற்றுக்கு அடுத்தாற்போல், எந்திர பாகங்கள் உற்பத்தித் துறையில் 7 சதவீதம், போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்தில் 7 சதவீதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. நாட்டின் 5 முக்கியத் துறைகள் மூலம் ஏறக்குறைய 50 சதவீதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களிலிருந்து மட்டும் கடந்த 4ஆண்டுகளில் உருவாகிய வேலைவாய்ப்புகளில் 54 சதவீதம் இந்த மாநிலங்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த புதிய வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் முதல் 8 இடங்களில் இருக்கும் மாநிலங்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டில், 5 லட்சத்து 70 ஆயிரத்து 804 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தற்போதுள்ள வேலைவாய்ப்பு  உருவாக்கத்திலிருந்து 21 சதவீதம் அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x