Published : 23 Mar 2019 03:51 PM
Last Updated : 23 Mar 2019 03:51 PM

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி? - கேரள காங்கிரஸ் தலைவர் தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் கேரள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அக்கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில் ராகுல் காந்தி கூடுதலாக ஒரு தொகுதியில் தென் மாநிலங்களில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என அம்மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா காந்தி உட்பட சிலர் தென் மாநிலங்களில் இருந்து போட்டியிடும் பழக்கத்தை வைத்திருந்தனர் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 2009-ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி அமேதியிலும், கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் போட்டியிட்டார்.

இதனிடையே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிட ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘‘கேரள மாநிலத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என நாங்கள் ராகுல் காந்தியை வலியுறுத்தி வந்தோம். தென் மாநிலங்களில் இருந்து போட்டியிட முதலில் ராகுல் காந்தி மறுத்தார். இருப்பினும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

எனினும் இறுதிகட்ட பரிசீலனை முடிந்த பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’’ எனக் கூறினார். இதுபோலவே மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால் கேரள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன்மூலம் கேரளாவில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகள் மிக அதிமாக இருக்கும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்கெனவே சித்திக் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x