

பிஹாரின் சரண் தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் சம்பந்தி சந்திரிகா ராய் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சையாக ராயின் மருமகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு கால்நடைத் தீவன வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். இவரது சார்பில் லாலுவின் இளையமகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை நிர்வகித்து வருகிறார்.
லாலு தலைமையில் பிஹாரில் அமைந்த மெகா கூட்டணியின் 20 தொகுதிகளில் 19 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று தேஜஸ்வி வெளியிட்டிருந்தார்.
அதில் சரண் தொகுதி லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மாமனாரான சந்திரிகா ராய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-ல் லாலு வென்ற சரண் தொகுதியில் அவரது மனைவி ரப்ரி தேவி 2014-ல் போட்டியிட்டு தோல்வியுற்றார். அங்கு ரப்ரி மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டதால் அத்தொகுதி மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மாமனாரான சந்திரிகா ராய்க்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேஜ் பிரதாப் தன் மாமனாரை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த வருடம் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை மணமுடித்த தேஜ் பிரதாப், அடுத்த ஐந்து மாதங்களில் அவரிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.
லாலு குடும்பத்தார் கேட்டுக் கொண்ட பிறகும் தன் நோட்டீஸை தேஜ் பிரதாப் வாபஸ் பெறவில்லை. இதனால், தேஜ் பிரதாப் மீது லாலு குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், அவர் தன் மாமனாரை எதிர்த்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்தது கட்சியின் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக தேஜ் பிரதாப் கட்சியில் தாம் வகித்த மாணவர் அணியின் காப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
பிஹாரின் மெகா கூட்டணியில் உள்ள 40-ல் லாலு கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் 9-ம் பாஜக கூட்டணியில் இருந்து வந்த உபேந்திரா குஷ்வாஹாவின் ஆர்எஸ்எஸ்பிக்கு 5 தொகுதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் மல்லாவின் விஐபி கட்சிக்கு தலா மூன்று தொகுதிகள் கிடைத்துள்ளன.