

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்களவைப் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி இன்று தொடங்குகிறது.
குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இன்று காலை மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள் அதன் பின் பிற்பகலில் சர்தார் வல்லவாய் படேல் நினைவரங்கில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்துகின்றனர். அதன் பின் காங்கிரஸ் கட்சி தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
ஹர்திக் படேல் இணைகிறார்
கடைசியாக குஜராத்தில் உள்ள பாவா நகரில் 1961-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனது செயற்குழு கூட்டத்தை நடத்தி இருந்தது. அதன் பின் அந்த மாநிலத்தில் செயற்குழு கூட்டம் நடத்தியதில்லை, ஏறக்குறைய 58 ஆண்டுகள்இடைவெளிக்குப் பின் இப்போது குஜராத்தில் மீண்டும் செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு முன்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில், பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியில் உயர்மட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு செயற்குழு. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாடு முழுவதும் பிரச்சாரம் எவ்வாறு இருக்க வேண்டும், வேட்பாளர்கள் தேர்வு, பாஜகவை எவ்வாறு தேர்தல் களத்தில் எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோனி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, தருண் கோகய், உம்மன் சாண்டி உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தண்டி யாத்திரை நாள்
சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கியப் போராட்டம் தண்டி யாத்திரை. அந்த தண்டி யாத்திரை கடந்த 1930-ம் ஆண்டு, மார்ச் 12-ம் தேதி காந்தியால் நடத்தப்பட்டது. அந்த நாளில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தையும், செயற்குழுக் கூட்டத்தையும் நடத்துகிறது.
இந்த செயற்குழு கூட்டம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமாக இருந்த மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் 89-ம் ஆண்டு இன்று ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. எதேச்சதிகாரம் கொண்ட, கொடூரமாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அஹிம்சை வழியில் காந்தி மேற்கொண்ட யாத்திரை " எனத் தெரிவித்துள்ளார்.
பிற்பகலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்ககப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் மண்ணில் இருந்து பாஜகவுக்கு வலிமையான ஒரு செய்தியை காங்கிரஸ் கட்சி தெரிவிக்க நினைக்கிறது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் எந்த வகையான வியூகங்களை வகுத்து பாஜகவைத் தோற்கடிப்பது, பாஜக, மோடி கடந்த 2014-ம் ஆண்டு அளித்த வாக்குறுதிகள், பாஜக அரசின் தோல்விகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மோடியின் நிர்வாகத்தில் இருந்து வரும் சீர்கேடுகள், விவசாயிகள் பிரச்சினை, பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை, வேலை உருவாக்கத்தில் சுணக்கம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
பேரணி பொதுக்கூட்டம்
அதன் பின் மாலையில் காந்தி நகரில் உள்ள அடாலஜ் பகுதியில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பின் பிரியங்கா காந்தி முதல் முறையாக இந்தப் பேரணியில் பங்கேற்றுப் பேச உள்ளார். ஜன சங்கல்ப் பேரணி என்று அழைக்கப்படும் இந்தப் பேரணியில் ராகுல் காந்தியும் பேசுவார் எனத் தெரிகிறது.