ஆந்திராவில் 5 முனைப் போட்டி: பவன் கல்யாணுடன் கைகோர்த்த இடது சாரிகள் - சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்?

ஆந்திராவில் 5 முனைப் போட்டி:  பவன் கல்யாணுடன் கைகோர்த்த இடது சாரிகள் - சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்?
Updated on
2 min read

ஆந்திர மாநிலத்தில் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுடன் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கின்றனர்.

இதனால், மாநிலத்தில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பவன் கல்யாண் கூட்டணி, காங்கிரஸ், பாஜக  என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு, ஒய்எஸ்ஆர் கட்சி,  கடும் போட்டி அளித்து வரும் நிலையில், பவன் கல்யாண், இடதுசாரிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் சேர்ந்துள்ளதால், வாக்குகள்  சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் சிதறும் நிலை உருவாகும்.

  தலைநகரம் உருவாக்குவதில் தாமதம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுக்கொடுக்காதது, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால்  மக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், தெலுங்குதேசம் கட்சிக்கு எதிராக  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வலுத்து வரும் நிலையில், பவன் கல்யாண் தலைமையில் கட்சிகள் ஒன்றுத திரள்வது சந்திரபாபு நாயுடுக்கு  மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இது தவிர்த்து காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். இதனால், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்குகளும், வெற்றியும் கணிக்க முடியாத அளவுக்கு  இருக்கும்.

ஒரே கட்டமாகத் தேர்தல்

ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வேட்பாளர்களை அறிவித்தார்.

இதில் நடிகர் பவன் கல்யான் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தல் சந்திக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன சேனா கட்சி 175 இடங்களில் 140 தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளும், சட்டப்பேரவைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தலா 2 மக்களவைத் தொகுதிகளிலும், தலா 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மக்களவைத் தேர்தல்

வேட்பாளர்களை அறிவித்தபின், நடிகர் பவன் கல்யான் நிருபர்களிடம் கூறுகையில், " எம்பி, எம்எல்ஏ தேர்தல் என்பது அதிகமாக செலவு பிடிக்கக்கூடியது. இந்த முறையை மாற்றுவதற்கு துணிச்சலான முடிவுகளுடன்தான் போட்டியிட வேண்டும். பணம் விளையாடும் இந்த தேர்தலை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இடதுசாரிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது " எனத் தெரிவித்தார்.

இதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தலில் குர்னூல், நெல்லூர் தொகுதியிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் அனந்தபுரமு, கடப்பா தொகுதியிலும் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ்கட்சிக்கு தனித் தொகுதிகளான சித்தூர், திருப்பதி, பபாட்லா ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வி. லட்சுமி நாராயனா ஜன சேனா கட்சியில் நேற்று பவன் கல்யான் முன்னிலையில் இணைந்தார். ஜகன்மோகன் ரெட்டியின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணை செய்தவர் நாராயனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது.

தேர்தல் நடைமுறை தொடங்கியது

ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ண திவேதி, மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிக்கையை இன்று வெளியிட்டார்.

இதேபோல தெலங்கானா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜத் குமார் 17 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று வெளியிட்டார்.இம்மாதம் 25-ம் தேதி வரை இரு மாநிலங்களிலும் வேட்புமனுத்தாக்கல் நடக்கும். 26-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 28-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in