

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள எச்.எல்.தத்து மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்று, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.எம்.லோதா வரும் 27-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இரண் டாம் இடத்தில் உள்ள எச்.எல்தத்து தலைமை நீதிபதியாக நியமிக் கப்பட உள்ளார். இதற்கான பரிந் துரையை மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், நிஷா பிரியா பாட்டியா (51) என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தத்துவின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு ‘ரா’ உளவு அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வரை பணியாற்றி கட்டாய பணி ஓய்வு பெற்றவர்.
இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2011-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவியாக இருந்த போதும், பின்னர் வழக்கறிஞராக பணியாற்றிய போதும் என் வழக்குகளை எச்.எல்.தத்து விசாரித்தார். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து விட்டார். அவர் மீது காவல்துறை, தேசிய மகளிர் ஆணையம், டெல்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளேன். அவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.ஜே.ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ்.என்ட்லா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘இது சிறுமைத்தனமான வழக்கு. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது’ என்று வாதிட்டார். இதுகுறித்து இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.