

சர்வாதிகார எண்ணத்துடன் மாற்றத்தை மக்கள் மனதில் திணிக்க முடியாது. அதுபோன்ற செயல்பாடுகள் அரசு மீது வர்த்தகம் செய்பவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
'தி இந்து பிஸ்னஸ் லைன்' (ஆங்கிலம்) சார்பில் 'சேஞ்ச்மேக்கர் விருது' வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசியதாவது:
''அரசு நிறுவனங்களின் கட்டாயப்படுத்தும் செயல்கள், இந்திய வர்த்தகர்களிடையே நம்பிக்கையில்லாத, விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அயல்நாட்டு அரசுகள், தொழிலதிபர்களின் மனதிலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும்.
சிறிய, பெரிய வர்த்தகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அரசு அதிகாரிகளின் நிர்பந்தத்தை எதிர்கொள்ளுமாறு இருக்கக் கூடாது. இதனால், காலப்போக்கில் எதிர்மறையான சூழல் ஏற்படும்.
நேர்மையான வர்த்தகர்கள், உண்மையான தொழில்முனைவோர்கள் ஆகியோரை ஒருபோதும் ரணப்படுத்தும் வகையில், வேதனைப்படுத்தும் வகையில் வருவாய்த் துறையினர் நடந்து கொள்ளக்கூடாது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அரசுக்கும், வர்த்தக சமூதாயத்துக்கும் இருக்கும் நம்பிக்கை அழிந்துவிட்டது.
மாற்றம் இல்லாதது நிரந்தரமானது அல்ல. இன்னும் இந்த நாடு வளர்ச்சியுடன் கூடிய மாற்றத்தை தேடி வருகிறது. வளர்ச்சியுடன் கூடிய மாற்றத்தை நாம அங்கீகரித்திருக்கிறோம்.
அதேசமயம், சர்வாதிகார மனப்போக்குடன் மாற்றங்களை மக்கள் மனதில் திணிக்க முடியாது. சவால்களுக்கு எதிராக புத்தாக்கத்தன்மையை ஊக்கப்படுத்துப்படும் போது, சமூகம் வளர்ச்சியும், மேம்பாடும் அடையும்.
அரசின் கொள்கையில் புத்தாக்கச் சிந்தனை, கருத்தொற்றுமை இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நாம் ஜனநாயகப் பாதையைத் தேர்வு செய்துள்ளோம், இதில் சர்வாதிகாரமான மனப்போக்குடன், மாற்றங்களைத் திணிக்க இடமில்லை.
நாம் இன்றும் இளமையான நாடாக இருந்தாலும், பழமையான சமூகம்தான். நமது பழமையான நாகரிகத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதுதான் பழமையான சமூகத்தின் வலிமை. முந்தைய காலத்தில் இருந்து, நாம் உயிர்ப்புடன் வாழவும், மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒற்றுமையும், நம்பிக்கையும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். மாற்றத்தை நாம் அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் போதெல்லாம் நாம் வளர்ந்திருக்கிறோம், மேம்பட்டிருக்கிறோம், முன்னோக்கி நகர்ந்திருக்கிறோம்''.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
இவ்விழாவில் ஜிஎஸ்டி வரியை நாட்டில் அமல்படுத்தியதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மன்மோகன் சிங் விருது வழங்கினார்.