

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர் ஆகியோர் வந்தனர்.
அவரை வாகா எல்லைக்கு அழைத்து வந்த பிறகு ஆவணங்கல் சரிபார்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டன.
அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் இந்தியாவுக்கு இன்று திரும்பினார்.
பாகிஸ்தான் விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஜெட் மிக்-21 விமானத்தின் விமானியான அபிநந்தன் பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் வான்வெளி விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
கைதுக்குப் பிறகு அவர் பன்னாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மரியாதையாக நடத்தப்பட்டார். அவர் இந்தியா திரும்புவதை நல்லெண்ணச் செய்கையாகவும் இந்தியாவுடனனா பதற்றத் தணிப்புச் செயலாகவும் பிரதமர் இம்ரான் அறிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் மிகச் சுருக்கமாக அவர் “திரும்பியதில் மகிழ்ச்சி” என்றார். அவர் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வார்.
இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அபிநந்தனை வரவேற்றார். அவர் முறையான வழக்கப்படி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.