

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ல் கட்சியின் மகளிர் பேரணியோடு தொடங்கிவைக்கிறார்.
கடந்த 2014லும் இதேபோன்று சர்வதேச மகளிர் தினத்தில்தான் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மம்தா பானர்ஜி தொடங்கியது தற்செயலான ஒன்றுதான், இம்முறையும் வரும் மார்ச் 8 அன்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக வரும் வெள்ளிக்கிழமையன்று சர்தாதானந்தா பூங்காவிலிருந்து பூங்கா வீதி வரை கட்சியின் மகளிர் பிரிவினர் நடத்தும் பேரணி ஊர்வலத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மூத்த மகளிர் அணி நிர்வாகி அவர் தெரிவிக்கையில்,
இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனினும், நாங்கள் வரும் மார்ச் 8ல் தேர்தல் பிரச்சாரங்கத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போதும், 2016 சட்டமன்ற தேர்தலின்போதும், மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தில்தான் மம்தா தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரணியில் கலந்துகொள்ளும் மம்தா பானர்ஜி நாடாளுமன்ற தேர்தல் செய்தியை எங்களுக்கு வழங்குவார். அதன்பின்னர் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு முழுமையான பிரச்சாரம் தொடங்கப்படும்'' என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு
தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் திரிணாமூல் கட்சியின் இப்பேரணிக் கூட்டம் குறித்து மேற்குவங்கத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், ''புதிய இந்தியா, ஒன்றுபட்ட இந்தியா, மற்றும் வலுவான இந்தியா படைப்போம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதில் முதன்மையான இடத்தில் இருக்கும் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை கடந்த ஜனவரி 19 அன்று கொல்கத்தாவில் கூட்டினார். அக்கூட்டத்தில் மோடி அரசை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மத்தியில் அடுத்துவரும் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் திரிணாமூல் கட்சி, மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளையும் வெல்லும் என்று உறுதியேற்றுள்ளது. கடந்த 2014 பொதுத் தேர்தலில் இக்கட்சி 34 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.