

பாஜக மூத்த தலைவரும் நடப்பு கான்பூர் தொகுதி எம்.பி.யுமான முரளி மனோகர் ஜோஷி இம்முறை தேர்தலில் நிற்பதை பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் விரும்பவில்லை என்ற தகவலை முரளி மனோகர் ஜோஷிக்கு கூறியவர் ராம்லால் என்ற கட்சியின் (அமைப்பு) பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கான்பூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக நினைத்து கொண்டிருந்த முரளி மனோகர் ஜோஷியிடம் ராம் லால், கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தாமல் நீங்களே நிற்கவில்லை என்று அறிவித்து விடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆனால் இதில் முரளி மனோகர் ஜோஷி பெரிய அளவில் மன வருத்தமடைந்ததோடு தான் எந்த அறிவிப்பையும் வெளியிடப்போவதில்லை, கான்பூரில் போட்டியிடுவதில் கவனமாக இருக்கிறேன் என்று ராம்லாலிடம் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் மோடியும் அமித் ஷாவுமே இதனை தெரிவித்திருக்கலாமே ராம்லாலை விட்டு ஏன் தெரிவிக்க வேண்டும் என்பது தனக்கு மிகப்பெரிய இன்சல்ட் என்றும் ஜோஷி வருந்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜோஷிக்கு டிக்கெட் இல்லை, வழங்கப்பட மாட்டாது என்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் முன்னதாக கட்சி வழங்கிடவில்லை. இது குறித்து கட்சியின் அறிந்த வட்டாரங்கள், ஜோஷி இதில் கடுப்பாகி, ’அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்னை ஏன் எதிர்கொள்ள முடியவில்லை’ என்று கேட்டதாக தி வயர் ஊடகம் தெரிவித்துள்ளது.
2014 லோக்சபா தேர்தலின் போது தனது வாரணாசி தொகுதியை மோடிக்காகத் தியாகம் செய்தார் ஜோஷி. கான்பூரில் நின்று பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும் தான் கட்சியில் இழிவு படுத்தப்பட்டதாக வருத்தமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவரே முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் வலுவானவர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அமித் ஷா, மோடி மீது இந்த விஷயத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
நாடாளுமன்ற உத்தேசங்கள் கமிட்டியின் சேர்மனாக முரளி மனோகர் ஜோஷி பணியாற்றி வருகிறார், ஆனால் பாதுகாப்புத் தயாரிப்பு நிலை, கங்கைத் துப்புரவு, வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் ஆகியவற்றில் மோடி அரசுக்கே பிடிக்காதவாறு இவர் நடந்துகொண்டதாக இவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரகுராம் ராஜனின் வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலையும் ஜோஷிதான் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
ஜோஷியின் இத்தகையச் செயல்பாடுகள் மோடியை வெறுப்பேற்றியதால் டிக்கெட் தராமல் அவரை தண்டித்துள்ளதாகவே கட்சியில் மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் உணர்கின்றனர். அதாவது கட்சியை உருவாக்கியவர்களை இப்படி தூக்கி எறிந்தால் நாளை இவர்களும் இவ்வாறு தூக்கி எறியப்படுவார்கள் என்று அதிருப்தி வட்டாரங்கள் அங்கலாய்த்துள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.