

உரி தாக்குதலை தொடர்ந்து ஒருமுறையும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும் இரண்டாவது முறையும் நமது ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுத்தது, மூன்றாவது முறையும் நமது வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுபற்றி விவரங்களை நான் வெளியிட மாட்டேன் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியவிமானப்படை கடந்த 26-ம் தேதி எல்லையைத் தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பாலகோட் அருகே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுபற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை வெற்றிகரமாக தகர்த்துள்ளனர். இரண்டு முறை நடந்த தாக்குதல் பற்றி என்னால் சொல்ல முடியும். ஆனால் மூன்றாவது பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. உரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
அதுபோலவே புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும் நமது ராணுவ வீரர்கள் சரியான முறையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு தகுந்த கொடுத்தோம். ஆனால் மூன்றாவது முறையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆனால் அதை பற்றி நான் வெளியே சொல்ல மாட்டேன்’’ எனக் கூறினார்.