Published : 11 Mar 2019 10:26 AM
Last Updated : 11 Mar 2019 10:26 AM

உபி.யில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும்: அஜித் சிங்

உ.பி.யில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. முசாபர் நகர் தொகுதியில் அஜித் சிங் போட்டியிடுகிறார். அங்கு நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அஜித் சிங் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல்களுக்கு முன் மக்களிடையே மத மோதல்களை பாஜக அரசு தூண்டி வருகிறது. 2013-ம் ஆண்டு உ.பி.யில் முசாபர்நகரில் கலவரம் ஏற்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 40 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவும் தாங்கள் வெற்றி பெறுவதற்காக மத மோதல்களைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது. ஆனால், உ.பி.யில் அகிலேஷ், மாயாவதி அமைத்துள்ள மெகா கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும். உ.பி.யில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் மெகா கூட்டணியின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும். இவ்வாறு அஜித் சிங் பேசினார்.

ஆர்எல்டி துணைத் தலைவரும் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி (எஸ்பி) - பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தள் (ஆர்எல்டி) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆர்எல்டி கட்சித் தலைவரும் எனது தந்தையுமான அஜித் சிங் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நான் பாக்பத் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறேன். மதுரா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் கட்சி முடிவெடுக்கும்.

தவிர கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எந்த பிரச்சினையும் இல்லை. பிராந்தியக் கட்சிகளின் தொண்டர்களுக்குள் இயல்பாகவே தொடர்பு இருக்கும். அந்த வகையில் எங்கள் கூட்டணி தொண்டர்கள், மக்களவைத் தேர்தலில் பாஜகவை

எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். இந்த கூட்டணி தலைவர்கள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகுதான் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எஸ்பி - பிஎஸ்பி - ஆர்எல்டி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பிரச்சினை ஏற்படவில்லை.

இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி கூறினார்.

முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x