Last Updated : 27 Mar, 2019 04:08 PM

 

Published : 27 Mar 2019 04:08 PM
Last Updated : 27 Mar 2019 04:08 PM

தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ரகுராம் ராஜன் நிதியமைச்சரா ?

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்றால், நிதியமைச்சராக பொறுப்பு ஏற்பீர்களா என்று கேள்விக்கு ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலை.யில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். புதுடெல்லியில் நேற்று நடந்த 'தி தேர்டு பில்லர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் ரகுராம் ராஜன் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நீங்கள் நிதியமைச்சராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரகுராம் ராஜன் கூறியதாவது:

" அவ்வாறு எனக்கு வாய்ப்பு எனக்கு வழங்கினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால், அதை ஏற்கத் தயாராகவும், நாட்டுக்குத் திரும்பவும் விருப்பம்தான்.

ஆனால், அதுபோன்று இதுவரை எந்தக் கட்சியும் என்னிடம் கேட்கவில்லை, அணுகவும் இல்லை. இது தொடர்பாக நானும் யாரையும், எந்தக் கட்சியினரையும் சந்திக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன், ஆதலால், புதிய வகையிலான, மிகவும் புத்தாகத்துடன் கூடிய வித்தியாசமான சீர்திருத்தங்கள் தேவை. நான் அந்த சிந்தனைகளை, சீர்திருத்தங்களைப் புகுத்துவதற்குத் தயாராக இருக்கிறேன், யாரேனும் அதைக் கேட்க விரும்பினால், அதை மிகவும் விளக்கமாக கூறுவதற்கும் தயாராக இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் நிதியமைச்சராக நாட்டுக்கு வந்தால், முதலில் குறுகிய காலச் சிக்கல்களைத் தீர்ப்பேன். நான் உள்பட ஏராளமான பொருளாதார அறிஞர்கள் ஏராளமான சீர்திருத்தச் சிந்தனைகளை, கருத்துகளை அளித்தோம் ஆனால் யாரும் படிக்கவில்லை. இப்போது அந்தத் திட்டங்களைக் கேட்கிறார்கள். ஏராளமான திட்டங்கள் முடங்கி இருக்கின்றன, அதை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவேன்.

முடிந்தவரை மிகவிரைவாக வங்கிச் சீர்திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் கடன் வழங்குவது முறைப்படுத்தப்படும், வளர்ச்சிக்கான முக்கிய 3 சீர்திருத்தங்கள் செய்யப்படும். நாட்டில் வேளாண்துறையை மீண்டும் சீரமைப்பதற்கும், வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு வருவதற்கு அதிகமான முன்னுரிமை அளிக்கப்படும்" .

இவ்வாறு ரகுராம்ராஜன் தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், நிதியமைச்சராக ரகுராம் ராஜனை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நிருபர்களிடம் பேசுகையில்கூட, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவது குறித்து ரகுராம் ராஜன் உள்பட ஏராளமான பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசித்தேன் என்று தெரிவித்திருந்தார். அதனால், ரகுராம் ராஜன் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x