Published : 09 Mar 2019 08:19 AM
Last Updated : 09 Mar 2019 08:19 AM

விளம்பரம் என்ற பெயரில் இயற்கை வளங்கள், அரசு சொத்துகளை அரசியல் கட்சியினர் சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

விளம்பரம் என்ற பெயரில் மலைகள், குன்றுகள், மரங்கள், பாலங்கள் உள்ளிட்ட அரசு பொதுச் சொத்துகளை அரசியல் கட்சியினர் சேதப்படுத்த அனு மதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இயற்கை மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தின் நிர்வாக அறங்காவலரான வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஒரு மனுவில் கூறியிருந்ததாவது:

இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்து களான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலையோரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர்.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும். இயற்கை வளங்களை அழிக்கும் வகையில் அல்லது சேதப்படுத்தும் வகையில் செயல் படும் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் குழு அமைத்து கண்காணிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பாக 2006-ம்ஆண்டே சென்னை உயர் நீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். ஆனால் முறையாக ஆராயாமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன் ஆஜராகி, அத்துமீறல் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இதுதொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘விளம்பரம் என்ற பெயரில் மலைகள், குன்றுகள், மரங்கள், பாலங்கள் உள்ளிட்ட அரசு சொத்துகளை அரசியல் கட்சியினர் சேதப்படுத்த அனுமதிக்க முடியாது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x