யஸ்வந்த்பூர் -டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து: உயிர் சேதங்கள் தவிர்ப்பு

யஸ்வந்த்பூர் -டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து: உயிர் சேதங்கள் தவிர்ப்பு
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசத்தில் யஸ்வந்த்பூர் - தாத்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் - தாத்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவில் ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில்  (பேண்ட்ரி காரில்) இந்த விபத்து ஏற்பட்டது. தீ  விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயில் ஊழியர்கள் தனியாக கழற்றி விட்டனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.  தீ விபத்தில், ரயிலின் பேண்ட்ரி கார் முழுவதும் எரிந்து நாசமானது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூருக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.  ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாகின.

கிழக்கு கோதாவரி மாவட்டம், கொல்லபுரூலுவில் அதிகாலை உணவு தயாரிக்கும் பெட்டியில் தீப்பிடிக்க அது அருகில் உள்ள பெட்டிக்கும் பரவியது. ஆனால் எச்சரிக்கையுடன் விழித்த பயணிகள் சிலர் வண்டியின் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர், கொல்லப்ரூலு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்து மேலும் பரவாதவாறு தடுத்தனர். இதனால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

தீப்பிடிக்கக் காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in