Published : 13 Mar 2019 08:47 PM
Last Updated : 13 Mar 2019 08:47 PM

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது  ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

 

ரகசிய பாதுகாப்பு ஆவணங்கள்  எந்த ஒரு அனுமதியும் ஒப்புதலும் பெறப்படாமல் நகலெடுக்கப்பட்டுள்ளது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் களவு என்பதாகவே கருதப்படுகிறது.

 

“இந்த ரகசிய ஆவணங்கள் தேசப்பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகக் கசியவிடப்பட்ட சதியில் ஈடுபட்டவர்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களே” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 8 பக்க பிரமாணப் பத்திரத்தில் புதனன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

உணர்வுபூர்வமான ஆவணங்கள்  ‘பரவலாக விநியோகிக்கப்பட்டு’ விரோதிகள் கையில் சிக்கியது எப்படி என்று இந்தப் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரமாணப்பத்திரத்தில் பாதுகாப்புத்துறை செயலர் சஞ்சய் மித்ரா கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து உள் விசாரணையும் பிப்.28ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது என்று சஞ்சய் மித்ரா தெரிவித்துள்ளார்.

 

“அதாவது ஆவணங்கள் எப்படி கசிந்தது என்பது மத்திய அரசுக்கு பெரிய கவலையளிக்கும் விஷயமாகும் ஏனெனில் நிர்வாகத்தில் எதிர்கால முடிவுகளின் புனிதம் காக்கப்பட வேண்டும்” என்று பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த பிரமாணப்பத்திரத்தில் தி இந்து ஆங்கிலம் உட்பட எந்த ஒரு ஊடகங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. கடந்த மார்ச் 6ம் தேதி அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆவணங்கள் பொதுவெளிக்குக் கசிய காரணமானவர்கள் மீது மத்திய அரசு குற்றநடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு, மனுதாரர்கள் ’அதிகாரபூர்வமற்ற, அனுமதியற்ற’ இந்த ஆவணங்களின் நகல்களை சேர்த்ததன் மூலம்  “இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் அயல்நாடுகளுடன் கூடிய நட்பு ரீதியான உறவுகள்” மீது ஊறுவிளைவிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

அதாவது அதிகாரபூர்வமற்ற நகல்களை எடுத்தது முதல் அதனை தங்கள் சீராய்வு மனுவில் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது வரை நடைபெற்ற சதியை பிரமாணப்பத்திரம் உச்ச நீதிமன்றத்துக்கு விளக்கியுள்ளது. அதாவது ரகசிய ஆவணங்களின் மிக முக்கியமான 14 பக்கங்களை சீராய்வு மனுவுடன் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் ஒரு 4 பக்கங்கள் ‘ரகசியம்’ என்று குறியிடப்பட்டதாகும்.  இந்தக் கசிவு ரஃபேல் ஒப்பந்தத்தின் கூறுகளை பாதித்துள்ளது என்கிறது இந்தப் பிரமாணப்பத்திரம்.

 

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆவணங்களைக் கொண்டு ஒப்பந்தம் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வையை வெளியிட்டுள்ளனர் என்றும் விவகாரங்கள் எப்படிப் பேசப்பட்டன, எப்படி தீர்வு காணப்பட்டன என்பது மனுதாரர்கள் சேர்த்த இந்த ஆவணங்களில் இல்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

 

மனுதாரர்கள் முயற்சியெல்லாம் நீதிமன்றத்தை திசைத்திருப்புவதற்காகவே என்கிறது மத்திய அரசு. ஆகவே ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விசாரணை தேவை என்ற மனுதாரர்களின் சீராய்வு மனு முழுதும் தள்ளுபடி செய்வதற்கு உரியதே.

 

முக்கிய ஆவணங்களை மனுதாரர்கள் அரசிடமிருந்து அனுமதி பெறாமல் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் ‘தகவலுரிமைச் சட்டம், 2005’-ன் கீழும் வெளிப்படுத்துவதற்கு உரியதல்ல என்று மத்திய அரசு திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x