

ராமர் கோயில் கட்ட மோடி தலைமையிலான அரசு உறுதுணை புரியும் என்று பாஜக தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியது:
"ராமர் கோயிலை கட்ட மோடி தலைமையிலான பாஜக அரசு உதவி செய்யும். ராமர் கோயிலை கட்டுவது பாஜகவின் கொள்கைகளில் ஒன்றாக இருந்தாலும், தற்போதைய சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் தலையாய கடமை என்பது நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே ஆகும்.
நாட்டு மக்களிடம் உறுதியளித்தபடி அனைத்து வாக்குகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப்பெறுவது என கட்சியின் கொள்கை ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும், இப்போதைக்கு எங்கள் இலக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே.
கொள்கை ரீதியாக பாஜகவுக்கு ராமர் கோயில் கட்டுவது முதன்மையானதாக இருந்தாலும், தேர்தலுக்கு முன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் வரிசைப்படியே அவற்றை நிறைவேற்றி வருகிறோம்.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியாது. ராமர் கோயிலை பாஜக நேரடியாக கட்டப்போவதில்லை. ராமர் கோயிலை கட்ட முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில் அவ்விவகாரத்தில் உள்ள தடைகளைத் தகர்க்க மோடி தலைமயிலான பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்றார்.
மோடி அரசில் அமைச்சர்களின் அதிகாரம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தெரிவித்தார்.